ஹதீஸ்
பின்செல்

ஸஹீஹ் அல்-புகாரி 90 · Tricks

6953நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களே! எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவரது ஹிஜ்ரத் (புலம்பெயர்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப் படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். எவர் தாம் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்திற்காக, அல்லது தாம் மணக்க விரும்பும் பெண்ணுக்காக ஹிஜ்ரத் செய்கிறாரோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும். இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சொற்பொழிவாற்றும்போது அறிவித்தார்கள்.3 அத்தியாயம் :

6954நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்குச் சிறுதுடக்கு ஏற்பட் டால் நீங்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ளாத வரை உங்கள் தொழு கையை அல்லாஹ் ஏற்கமாட்டான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.4 அத்தியாயம் :

6955அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அல்லாஹ்வின் ஆணைப்படி) கடமையாக்கிய ஸகாத்தைப் பற்றி எனக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் (கடிதம்) எழுதியபோது, “ஸகாத் கொடுப்பதற்கு அஞ்சி, பிரிந்தவற்றை ஒன்றுசேர்ப்பதும் ஒன்றுசேர்ந்தவற்றைப் பிரிப்பதும் கூடாது” என்று குறிப்பிட்டார்கள்.6 அத்தியாயம் :

6956தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நஜ்த் பகுதியைச் சேர்ந்த) கிராம வாசி ஒருவர் தலைவிரிகோலத்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்மீது கடமையாக்கியுள்ள தொழுகை பற்றிக் கூறுங்கள்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நாளொன்றுக்கு) ஐவேளை தொழுகை கள் (உன்மீது கடமையாகும்); நீயாக விரும்பிக் கூடுதலாக ஏதேனும் தொழுது கொண்டால் தவிர” என்று சொன்னார்கள். அவர், “அல்லாஹ் என்மீது கடமையாக் கியுள்ள நோன்பு பற்றிக் கூறுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “ரமளான் மாதம் (முழுவதும் நீ நோன்பு நோற்பது உன்மீது கடமையாகும்); நீயாக விரும்பிக் கூடுதலாக ஏதேனும் நோன்பு நோற்றால் தவிர” என்று சொன்னார்கள். தொடர்ந்து அவர், “அல்லாஹ் என்மீது கடமையாக்கியுள்ள ஸகாத் பற்றிக் கூறுங்கள்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஸகாத் உள்பட) இஸ்லாமிய சன்மார்க்க நெறிகளை அவருக்குத் தெரிவித்தார்கள். அவர், “உங்களைக் கண்ணியப்படுத்திய (இறை)வன்மீது சத்தியமாக! நான் (இவற்றில்) எதையும் கூடுதலாகச் செய்யமாட்டேன். அல்லாஹ் என்மீது கடமையாக்கி யுள்ளவற்றில் எதையும் நான் குறைக்கவு மாட்டேன்” என்று கூறி(விட்டுத் திரும்பிச் செல்லலா)னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இவர் (தாம் கூறியபடி) உண்மையாக நடந்துகொண்டால் ‘வெற்றி யடைவார்’ அல்லது ‘இவர் (கூறியபடி) உண்மையாக நடந்து கொண்டால் சொர்க்கத்தில் நுழைவார்’ என்று கூறினார்கள்.7 அறிஞர்களில் சிலர் கூறுகிறார்கள்: நூற்று இருபது ஒட்டகங்கள் இருந்தால் மூன்று வயதுடைய இரு ஒட்டகங் கள் ஸகாத்தாக வழங்க வேண்டும். இந்நிலையில் ஒருவர் ஸகாத் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காக அந்த (120) ஒட்டகங்களையும் (ஓராண்டு பூர்த்தியாவதற்கு ஓரிரு நாட்கள் இருக்கையில்) வேண்டுமென்றே அறுத்துவிட்டாலோ, அன்பளிப்பாக வழங்கிவிட்டாலோ, வேறு தந்திரங்களைக் கையாண்டாலோ அவர்மீது (ஸகாத்) கடமையாகாது.8 அத்தியாயம் :

6959இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் உபாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள், நேர்ந்துகொண்டுவிட்டு அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துவிட்ட தம் தாயாரின் நேர்த்திக் கடன் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவருக்காக நீங்கள் அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுங்கள்” என்றார்கள்.12 “(ஒருவருக்குரிய) ஒட்டகங்களின் எண்ணிக்கை இருபதாகிவிட்டால் அதற்காக நான்கு ஆடுகள் (அவர் ஸகாத்) கொடுக்க வேண்டும். ஆனால், அவர் ஸகாத்தை இல்லாமல் செய்வதற்காகத் தந்திரமாகத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் ஓராண்டு முழுமையடைவதற்கு முன்பே அந்த ஒட்டகங்களை அன்பளிப்பாக வழங்கிவிட்டாலோ, விற்றுவிட்டாலோ அவர்மீது (ஸகாத்) ஏதும் கடமையாகாது. அவ்வாறே அவற்றை(ச் செலவு) அழித்துவிட்டு அவர் இறந்துபோனாலும் அவரது (இந்தச்) சொத்தில் (ஸகாத்) ஏதும் கடமையாகாது” என்று சிலர் கூறுகிறார்கள். அத்தியாயம் :

6960உபைதுல்லாஹ் அல்உமரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாஃபிஉ (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷிஃகார் முறைத் திருமணத்தை தடை செய்தார் கள்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று என்னிடம் தெரிவித்தார்கள். அப்போது நான் நாஃபிஉ அவர்களிடம், “ஷிஃகார் (முறைத் திருமணம்) என்றால் என்ன?” என்று கேட்டேன். அவர்கள், “ஒருவர் மணக்கொடை (மஹ்ர்) ஏதுமில்லாமல் இன்னொருவரின் மகளை மணந்துகொண்டு (அதற்குப் பதிலாக) அவருக்குத் தம் மகளை மணமுடித்து வைப்பதாகும். அவ்வாறே மணக்கொடை ஏதுமில்லாமல் ஒருவர் மற்றொருவரின் சகோதரியை மணந்துகொண்டு (அதற்குப் பதிலாக) அவருக்குத் தம் சகோதரியை மணமுடித்துவைப்பதாகும்” என்று பதிலளித்தார்கள்.13 சிலர் கூறுகிறார்கள்: ஒருவர் தந்திரம் செய்து ‘ஷிஃகார்’ முறைப்படித் திருமணம் செய்துகொண்டால் அத்திருமணம் செல்லும்; ஆனால், (அதில் விதிக்கப்பட்ட) முன்நிபந்தனை செல்லாது. அதே நேரத்தில், தவணைமுறைத் திருமணம் (அல்முத்ஆ) செல்லாது; (அதில் விதிக்கப்படும்) முன்நிபந்தனையும் செல்லாது. வேறுசிலரோ, “தவணைமுறைத் திருமணமும் ‘ஷிஃகார்’ முறைத் திருமணமும் செல்லும்; ஆனால், (அவற்றில் விதிக்கப்படும்) முன்நிபந்தனை செல்லாது” என்று கூறுகின்றனர். அத்தியாயம் :

6961முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: தவணைமுறைத் திருமணம் (நிகா ஹுல் முத்ஆ) புரிவதில் தவறில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கருதுவதாக (என் தந்தை) அலீ (ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது தவணைமுறைத் திருமணத்திற்கும் நாட்டுக்கழுதைகளின் இறைச்சியை உண்பதற்கும் தடை விதித் தார்கள்” என்று கூறினார்கள்.14 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. “ஒரு மனிதர் தந்திரமாகத் தவணை முறைத் திருமணம் செய்தால் அத்திரு மணம் செல்லாது” என்று சிலர் கூறினர். வேறுசிலரோ, “அந்தத் திருமணம் செல்லும்; ஆனால் (அதில் விதிக்கப் பட்ட) முன்நிபந்தனை செல்லாது” என்று கூறினர். அத்தியாயம் :

6962அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தேவைக்குமேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு தடுத்தால், அதைச் சுற்றியுள்ள) புற் பூண்டுகளை (மேய விடாமல் கால்நடை களை)த் தடுத்ததாகிவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15 அத்தியாயம் :

6963இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்திவிடுவதற்காக ஏலம் மற்றும் பிற பேரங்களின்போது) விலையை அதிகமாகக் கேட்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.16 அத்தியாயம் :

6964அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரங்களில் ஏமாற்றப்படு வதாகக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ வியாபாரத்தின்போது ‘ஏமாற்றுதல் கூடாது’ என்று கூறிவிடு” என்று சொன்னார்கள்.17 அத்தியாயம் :

6965உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அநாதை(ப் பெண் களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நீதியோடு நடந்துகொள்ள முடியாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான (வேறு) பெண்களை மணந்துகொள்ளுங்கள்” என்று தொடங்கும் (4:3ஆவது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அநாதைப் பெண் ஒருத்தி தன் காப்பாளரின் பாதுகாப்பில் இருந்துவருவாள். அவர் அப்பெண்ணின் செல்வத்தை யும் அழகையும் கண்டு ஆசைப்பட்டு அவளைப் போன்ற பெண்களுக்கு வழங்கப்பட்டுவரும் மணக்கொடையை விட மிகக் குறைந்த அளவு மணக் கொடை (மஹ்ர்) கொடுத்து அவளை மணமுடித்துக்கொள்ள விரும்புவார். அப்போதுதான், முழுமையான மணக் கொடை (மஹ்ர்) கொடுத்து அப்பெண் களுக்கு நீங்கள் நீதி செலுத்தாத வரை அவர்களை நீங்கள் மணமுடிக்கக் கூடாது என அவர்களுக்குத் தடை விதிக்கப் பட்டது. அதன் பின்னரும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது குறித்துத் தீர்ப்புக் கேட்டனர். அப்போதுதான் “(நபியே! மக்கள்) உம்மிடம் பெண்கள் பற்றி தீர்ப்பு வழங்கும்படி கேட்கிறார்கள்” என்று தொடங்கும் (4:127ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். தொடர்ந்து அறிவிப்பாளர் இந்த ஹதீஸின் முழுத் தொடரையும் கூறினார்.18 அத்தியாயம் :

6966நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் கொடி ஒன்று உண்டு. அதைக் கொண்டு அந்த மோசடிக்காரன் அடையாளம் காணப்படுவான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21 அத்தியாயம் :

6967நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஒரு மனிதனே! என்னிடம் நீங்கள் உங்கள் வழக்குகளைக் கொண்டுவருகின்றீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரைவிடத் தமது ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்குச் சாதுரியம்மிக்கவராக இருக்கக்கூடும். மேலும், நான் (அந்தச் சாதுரியமான வரிடமிருந்து) செவியுறுவதற்கேற்ப அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கிறேன். ஆகவே, (எவரது சொல்லை வைத்து) அவருடைய சகோதரனின் உரிமையில் சிறிதளவை (அவருக்குரியது) என்று (உண்மை நிலை அறியாமல்) நான் தீர்ப்பளித்துவிடுகின்றேனோ அவர் அதை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான் பெயர்த்துக் கொடுக்கிறேன். இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22 அத்தியாயம் :

6968அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “கன்னிப்பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது. கன்னிகழிந்த பெண்ணிடம் (வெளிப்படையான) உத்தரவு பெறாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது” என்று கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “அவள் மௌனம் சாதிப்பதே (அவள் சம்மதிக்கிறாள் என்பதற்கு அடையாளமாகும்)” என்று சொன்னார்கள்.23 ஆனால், சிலர் கூறுகின்றனர்: ஒரு கன்னிப்பெண்ணிடம் அனுமதியும் கோராமல், (முறைப்படி) அவள் திருமணமும் செய்துகொள்ளப்படாமல் இருக்கும்போது, ஒருவர் தந்திரமாக இரண்டு பொய் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தி அவளை அவளது இசைவுடன் தாம் மணந்துகொண்டதாக வாதிட்டார். நீதிபதியும் (அதை உண்மை என்று நம்பி) அவளது திருமணத்தை உறுதிப்படுத்தினார். இந்தச் சாட்சியம் பொய் என்பது அந்தக் கணவனுக்கு (நன்கு) தெரியும். இந்நிலையில் அவளுடன் அவன் தாம்பத்திய உறவு கொள்வதில் தவறில்லை. இது செல்லத் தகுந்த திருமணமே (என்று அந்தச் சிலர் கூறுகின்றனர்). அத்தியாயம் :

6969காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜஅஃபர் அவர்களுடைய மக்களில் ஒரு பெண்மணி, தன்னைத் தன் காப்பாளர் தனக்குப் பிடிக்காத ஒருவருக்கு மணமுடித்து வைக்கப்போகிறார் என அஞ்சினார். ஆகவே, அப்பெண்மணி ஜாரியா என்பவரின் (புதல்வர் யஸீதுடைய) புதல்வர்களான அப்துர் ரஹ்மான் (ரஹ்), முஜம்மிஉ (ரஹ்) ஆகிய இரு அன்சாரிப் பெரியவர்களிடம் ஆளனுப்பிவைத்தார். அவர்கள் இருவரும், “(பெண்களே!) அஞ்சாதீர்கள். ஏனெனில், கிதாம் என்பவரின் புதல்வியான கன்ஸாவை அவருடைய தந்தை அவருக்குப் பிடிக்காத ஒருவருக்கு மணமுடித்துவைத்தார். (இது குறித்து அப்பெண்மணி முறையிட்ட போது) நபி (ஸல்) அவர்கள் அத்திரு மணத்தை ரத்துச் செய்தார்கள்” என்று கூறியனுப்பினார்கள். அறிவிப்பாளர் சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்துர் ரஹ்மான் பின் காசிம் (ரஹ்) அவர்கள் தம் தந்தை (காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர்-ரஹ்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவித்ததை நான் செவியுற்றேன்.24 அத்தியாயம் :

6970அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிகழிந்த பெண்ணிடம் (வெளிப்படையான) உத்தரவு பெறாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது. கன்னிப்பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது” என்று கூறினார்கள். மக்கள், “எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “அவள் மௌனமாயிருப்பதே (அதற்கு அடையாளமாகும்)” என்று சொன்னார்கள். ஆனால், சிலர் கூறுகின்றனர்: இரு பொய் சாட்சிகளை வைத்துக்கொண்டு ஒரு மனிதர், கன்னிகழிந்த பெண்ணின் உத்தரவுப்படி அவளைத் தாம் மண முடித்துக்கொண்டதாகக் கூறி தந்திரம் செய்தார். (இவ்வழக்கை விசாரித்த நீதிபதியும்) அவளை அவர் மணமுடித்துக்கொண்டதாக உறுதி செய்தார். ஆனால், அவளைத் தாம் ஒருபோதும் மணமுடிக்கவில்லை என்பது அந்தக் கணவனுக்கு (நன்கு) தெரியும். இப்போது இத்திருமணம் அவனுக்குச் செல்லும். அவளுடன் அவன் தங்கியிருப்பதில் குற்றமில்லை. அத்தியாயம் :

6971ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(திருமண விஷயத்தில்) கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோர வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், “கன்னிப்பெண் (வெளிப்படையாகத் தன் இசைவைத் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அவளது மௌனமே அவளுடைய அனுமதி” என்று சொன்னார்கள்.25 சிலர் கூறுகின்றனர்: ஒருவர் ஓர் அநாதைச் சிறுமியை, அல்லது கன்னிப் பெண்ணை மணமுடிக்க விரும்பினார். ஆனால், அவள் மறுத்துவிட்டாள். இந்நிலையில், அவர் தந்திரமாக இரு பொய் சாட்சிகளை அழைத்து வந்து, தாம் அவளை மணமுடித்துக் கொண்டதாகத் தெரிவித்தார். பின்னர் அந்த அநாதைச் சிறுமி பருவம் எய்தினாள்; (அந்தத் திருமணத்தை) ஏற்றும்கொண்டாள். நீதிபதியோ பொய் சாட்சியத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால், அது பொய் என்று அந்தக் கணவனுக்கு (நன்றாகவே) தெரியும். இந்நிலையில் (அவளுடன்) தாம்பத்திய உறவு கொள்ள அவனுக்கு அனுமதி உண்டு என்று அவர்கள் கூறுகின்றனர். அத்தியாயம் :

6972ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இனிப்பும் தேனும் விருப்ப மானவையாக இருந்தன. நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை முடித்ததும் தம் துணைவியரிடம் வந்து பகல்பொழுதைக் கழிப்பார்கள்; அவர் களுடன் நெருக்கமாக இருப்பார்கள். இவ்வாறு (ஒருநாள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்ற நபியவர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்துவிட்டார்கள். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த் தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும், அதிலிருந்து தயாரித்த பானத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. உடனே நான் “அல்லாஹ்வின் மீதாணையாக! இதை நிறுத்துவதற்காக இதோ ஒரு தந்திரம் செய்வோம்” என்று கூறிக்கொண்டு, (நபியவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா (ரலி) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறி, “நபி (ஸல்) அவர்கள் உங்களிடம் வரும்போது உங்களை நெருங்குவார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரே! கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள். ‘இல்லை’ என்று நபியவர்கள் கூறுவார்கள். உடனே இது என்ன வாடை? என்று அவர்களிடம் கேளுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்து (துர்) வாடை வீசுவதைக் கடுமையாகக் கருதுவார்கள். ஆதலால், ‘எனக்கு ஹஃப்ஸா தேன் பானம் புகட்டினார்’ என்று கூறுவார்கள். உடனே நீங்கள் ‘இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேனை உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம். (ஆகவேதான், வாடை வருகிறது)’ என்று சொல்லுங்கள். நானும் இவ்வாறே சொல்வேன். ஸஃபிய்யாவே! நீங்களும் இவ்வாறே சொல்லுங்கள் என்று (மற்றொரு துணைவியாரான ஸஃபிய்யாவிடமும்) சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களிடம் சென்றபோது (நான் சொன்னபடி செய்துவிட்டு) சவ்தா (என்னிடம்) கூறினார்கள்: எவனைத் தவிர வேறு இறைவனில்லையோ அவன் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் என் வீட்டுவாசலில் இருந்தபோது உங்களுக்குப் பயந்து நீங்கள் என்னிடம் சொன்னபடி நபியவர்களிடம் சொல்ல விரைந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னை) நெருங்கியதும் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கருவேலம் பிசினைச் சாப்பிட்டீர் களா?” என்று கேட்டேன். அவர்கள் “இல்லை” என்று பதிலளித்தார்கள். “அப்படியானால், இது என்ன வாடை?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஹஃப்ஸா எனக்குத் தேன் பானம் புகட்டினார்” என்று சொன்னார்கள். நான், “அதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேன் உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம் (ஆகவேதான், தேனில் வாடை ஏற்பட்டுவிட்டதுபோலும்)” என்று சொன்னேன். (தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது அதைப் போன்றே நானும் சொன்னேன். ஸஃபிய்யாவிடம் நபி (ஸல்) அவர்கள் சென்றபோது அவரும் அதைப் போன்றே தெரிவித்தார். பிறகு (மறுநாள்) நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவிடம் சென்றபோது நபியவர்களிடம் அவர், “அல்லாஹ்வின் தூதரே! அருந்துவதற்குத் தங்களுக்குச் சிறிதளவு தேன் தரட்டுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அது எனக்குத் தேவையில்லை” என்று கூறினார்கள். (இது குறித்து) சவ்தா (ரலி) அவர்கள், “அல்லாஹ் தூயவன்! நபி (ஸல்) அவர் களை, அதை அருந்தவிடாமல் நாம் தடுத்துவிட்டோமே!” என்று (வருத்தத்து டன்) கூறுவார்கள். நான் அவரிடம், “சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப் போகிறது)” என்று சொல்வேன்.26 அத்தியாயம் :

6973அப்துல்லாஹ் பின் ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (நாட்டு மக்களின் நிலவரம் அறிய) ஷாம் (சிரியா) நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். ‘சர்ஃக்’ எனுமிடத்திற்கு அவர்கள் வந்தபோது ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. அப்போது அவர்களிடம் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “ஓர் ஊரில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கு நீங்கள் (வலியப்) போகாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது கொள்ளைநோய் பரவிவிட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரிலிருந்து) வெளியேறாதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகத் தெரிவித்தார்கள். ஆகவே, உமர் (ரலி) அவர்கள் சர்ஃகிலிருந்து (மதீனாவிற்குத்) திரும்பிவிட்டார்கள்.27 மற்றோர் அறிவிப்பில் சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உமர் (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடமிருந்து ஹதீஸைச் செவியுற்றதால்தான் சர்ஃகிலிருந்து திரும்பிவிட்டார்கள். அத்தியாயம் :

6974ஆமிர் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொள்ளை நோய் பற்றிக் குறிப்பிட்ட போது, “அது (இறைவன் வழங்கும்) வேதனையாகும். (அட்டூழியங்கள் புரிந்த) சில சமுதாயத்தார் அதன்மூலம் வேதனைக் குள்ளாக்கப்பட்டனர். பிறகு அதில் சிறிதளவு (இன்றளவும்) எஞ்சியுள்ளது. ஆகவே, அது அவ்வப்போது வந்துபோகும். ஒரு பகுதியில் அது இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால், அங்கே நீங்கள் செல்லாதீர்கள். அது பரவியிருக்கும் பகுதியில் நீங்கள் இருந்தால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்” என்று சொன்னார்கள்.28 அத்தியாயம் :

6975நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் அன்பளிப்புப் பொருளை திரும்பப் பெற்றுக்கொள்பவன், தான் வாந்தி எடுத்ததைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். (இதுபோன்ற) கெட்ட உதாரணம் நமக்கு உரியதன்று. இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.30 அத்தியாயம் :

6976ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பிரிக்கப்படாத ஒவ்வொரு (அசையாச்) சொத்தில்தான், பங்காளிக்கே விற்க வேண்டும் என்ற விலைக்கோள் உரிமையை (ஷுஃப்ஆ) நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள். எல்லைகள் வகுக்கப்பட்டு பாதைகள் குறிக்கப்பட்டுவிட்டால் பங்காளிக்குத்தான் விற்க வேண்டும் என்ற (கட்டாய) நிலையில்லை.31 சிலர், “(பங்காளிக்கு இருப்பதைப் போன்றே) அண்டை வீட்டாருக்கும் விலைக்கோள் (ஷுஃப்ஆ) உரிமை உண்டு” என்று கூறுகின்றனர். பிறகு இவ்விதியை உறுதிப்படுத்த விரும்பிய அவர்கள், (முன்னுக்குப்பின் முரணாக ஒரு கட்டத்தில்) இதே விதியைச் செல்லாததாக்கிவிடுகிறார்கள். (அதன் விவரமாவது:) ஒருவர் ஒரு வீட்டை (முழுவதும்) வாங்க விரும்பினார். ஆனால், அண்டை வீட்டான் விலைக்கோள் (ஷுஃப்ஆ) உரிமை கோரக்கூடும் என அஞ்சினார். ஆகவே, (அந்த வீட்டின்) நூறு பங்குகளில் (பிரிக்கப்படாத) ஒரு பங்கை (மட்டும் முதலில்) விலைக்கு வாங்கினார். (இதையடுத்து அவர் வீட்டு உரிமையாளருக்குப் பங்காளியாகிவிடுகிறார்.) பிறகு மீதிப் பங்குகளையும் விலைக்கு வாங்கினார். (இப்போது அண்டை வீட்டானுக்கு விலைக்கோள் உரிமை இல்லாமல் போய்விடும். ஏனெனில், அவர் வாங்கிய) முதலாவது பங்கில் மட்டும்தான் அண்டை வீட்டானுக்கு விலைக்கோள் உரிமை இருந்தது. (அதை அவன் பயன்படுத்தத் தவறிவிட்டான்.) வீட்டின் மீதியுள்ள பங்குகளில் அவனுக்கு அந்த உரிமை கிடையாது. (பங்காளிக்கே அந்த உரிமை உண்டு.) இவ்வாறு அவர் தந்திரம் செய்ய அவருக்கு உரிமை உண்டு என்று கூறுகிறார்கள்.32 அத்தியாயம் :

6977அம்ர் பின் அஷ்ஷரீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் வந்து என் தோள்மீது தமது கையை வைத்து, (என் மாமா) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் (அழைக்க,) நானும் அன்னாருடன் சென்றேன். அப்போது (நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அடிமையான) அபூராஃபிஉ (ரலி) அவர்கள் மிஸ்வர் (ரலி) அவர்களிடம், “என் வீட்டிலுள்ள ஓர் அறையை என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள்ளுமாறு சஅத் அவர்களுக்கு நீங்கள் யோசனை கூறமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், “நான் (வாங்குவதாக இருந்தால்) அவருக்கு (பொற்காசுகளில்) நானூறைவிட அதிகமாகத் தரமாட்டேன்; அதையும் பல தவணைகளில்தான் தர முடியும்” என்று கூறினார்கள். அபூராஃபிஉ (ரலி) அவர்கள், “(இந்த வீட்டை விலைக்குக் கேட்டு) எனக்கு ரொக்கமாக ஐநூறு (வெள்ளி அல்லது பொற்காசுகள்) தரப்பட்டது. ஆனால், அதற்கு நான் சம்மதிக்கவில்லை. ‘அண்மையில் இருப்பதால் அண்டை வீட்டாரே அதிக உரிமைபடைத்தவராவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதை மட்டும் நான் கேட்டிராவிட்டால், இந்த வீட்டை உங்களுக்கு நான் ‘விற்க’ அல்லது ‘கொடுக்க’ முன்வந்திருக்கமாட்டேன்” என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அலீ பின் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) (எனக்கு இதை அறிவித்த) சுஃப்யான் (ரஹ்) அவர்களிடம் நான் “மஅமர் (ரஹ்) அவர்கள் இவ்வாறு (இந்த அறிவிப்பாளர்தொடரில்) கூறவில்லையே?” என்று கேட்டேன். சுஃப்யான் அவர்கள், “ஆனால், மஅமர் (ரஹ்) அவர்கள் எனக்கு இவ்வாறே கூறினார்கள்” என்று சொன்னார்கள். சிலர் கூறுகிறார்கள்: ஒருவர் (அண்டை வீட்டாருக்குரிய) விலைக்கோள் உரிமையை மறுக்க எண்ணினால், தந்திரம் செய்து, அதை இல்லாமல் ஆக்கிவிடலாம். அதாவது விற்பவர் வாங்கும் எண்ணத்தில் உள்ளவருக்கு அந்த வீட்டை அன்பளிப்பாக வழங்கிட வேண்டும். அத்துடன் அதற்கு எல்லைகளை வகுத்து அவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். வாங்கியவர் (முன்பே பேரம் பேசாமல்) அதற்குப் பதிலாக ஆயிரம் வெள்ளிக் காசுகளை வழங்கிட வேண்டும். இவ்வாறு செய்துவிட்டால் (அன்பளிப்பு என்பது வாரிசுரிமை என்பதால்) விலைக்கோள் உரிமை கோர அதில் எவருக்கும் அதிகாரம் கிடையாது. அத்தியாயம் :

6978அபூராஃபிஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் என்னிடம் (எனது) வீட்டை நானூறு பொற்காசுகளுக்குப் பகரமாக விலைபேசினார்கள். அப்போது நான் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அண்மையில் இருப்பதால் அண்டை வீட்டாரே அதிக உரிமை படைத்தவராவார்” என்று கூறியதை நான் செவியுற்றிராவிட்டால் (இந்த வீட்டை) உங்களுக்கு நான் வழங்கியிருக்கமாட்டேன்” என்று சொன்னேன். “வீட்டின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கிய ஒருவர் (அதன் மீதுள்ள) விலைக்கோள் உரிமையைத் தடுக்க விரும்பினால் பருவமடையாத தம் மகனுக்கு அன்பளிப்பாக வழங்கிடலாம். (அன்பளிப்பாகத்தான் அது வழங்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்காகச்) சத்தியம் செய்ய வேண்டிய பொறுப்பு (சிறுவனான) அவனுக்குக் கிடையாது” என்று சிலர் கூறுகிறார்கள். அத்தியாயம் :

6979அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் ஸகாத் களை வசூலிக்கும் அதிகாரியாக இப்னுல் லுத்பிய்யா என்றழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூóத்துக்கொண்டு) வந்தபோது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அவர், “இது உங்களுக்குரியது; இது (எனக்கு) அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் சொல்வது உண்மையானால் உம் தந்தை வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திரும்! உம்மிடம் அன்பளிப்புகள் வருகின்றனவா பார்ப்போம்” என்று கூறினார்கள். பிறகு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக்கிய ஒரு பணிக்காக உங்களில் ஒருவரை நான் அதிகாரியாக்க, அவர் சென்றுவிட்டு வந்து ‘இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று சொல்கிறார். அவர் தம் தந்தை வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திருந்தால் அவருக்கு அந்த அன்பளிப்புகள் வந்துசேருமா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் எவரும் உரிமையின்றி (முறைகேடாக) எந்த ஒன்றை அடைந்துகொண்டாலும் மறுமை நாளில் அதை (தமது தோளில்) சுமந்தவண்ணமே அல்லாஹ்வை அவர் சந்திப்பார். இந்த வகையில் கனைத்துக்கொண்டிருக்கும் ஒட்டகத்தையோ, அல்லது கத்திக்கொண்டிருக்கும் பசுவையோ ஆட்டையோ (தமது தோளில்) சுமந்து கொண்டு அல்லாஹ்வைச் சந்திக்கும் எவரையும் நான் உறுதியாக அறிவேன்” என்று கூறினார்கள். பிறகு, தமது அக்குளின் வெண்மை தெரியும் அளவிற்குத் தம் இரு கைகளையும் உயர்த்தி, “இறைவா! (உன் கட்டளையை) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?” என்று நபியவர்கள் கூறியதை என் கண்ணால் கண்டேன்; என் காதால் கேட்டேன்.33 அத்தியாயம் :

6980நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அண்மையில் இருப்பதால் அண்டை வீட்டாரே அதிக உரிமை படைத்தவராவார். இதை அபூராஃபிஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். சிலர் கூறுகின்றனர்: ஒருவர் ஒரு வீட்டை இருபதாயிரம் வெள்ளிக் காசுகள் கொடுத்து வாங்க விரும்பினார். அவர் (அண்டை வீட்டாருக்குரிய விலைக்கோள் உரிமையைச் செயóழக்கச் செய்யப் பின்வருமாறு) தந்திரம் செய்வதில் தவறில்லை. அதாவது இருபதாயிரம் வெள்ளிக் காசுகள் விலைபேசி வீட்டை அவர் வாங்கிக் கொள்வார். ஆனால், விற்றவரிடம் 9,999 வெள்ளிக் காசுகளையும், இருபதாயிரத்தில் மீதியுள்ள (10,001) வெள்ளிக் காசுகளுக்குப் பதிலாக ஒரு பொற்காசையும் அவர் ரொக்கமாகச் செலுத்துவார். இந்நிலையில், விலைக்கோள் உரிமை கோருபவர் தமது உரிமையைக் கோரினால், (பேசப்பட்டுவிட்ட) இருபதாயிரம் வெள்ளிக்காசுகளைக் கொடுத்து வீட்டை எடுத்துக்கொள்ளலாம். இல்லையேல், அந்த வீட்டின் மீது அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மேலும், இந்த நிலையில், அது வேறொருவருக்குச் சொந்தமான வீடு என்று தெரியவந்தால், விலைக்கு வாங்கியவர் விற்றவரிடம் செலுத்திய தொகையை மட்டுமே திரும்பப் பெறுவார். அது 9,999 வெள்ளிக் காசுகளும் ஒரு பொற்காசுமாகும். ஏனெனில், விற்கப்பட்ட பொருள் வேறொருவருக்குச் சொந்தமானது என்று தெரியவரும்போது, ஏற்கெனவே விற்றவரும் வாங்கியவரும் செய்துகொண்ட (10,001 வெள்ளிக்காசுகளுக்குப் பதிலாக) ஒரு பொற்காசு என்ற நாணயமாற்று ஒப்பந்தம் முறிந்துவிடும். அதே நேரத்தில், விலைக்கு வாங்கியவர் அந்த வீட்டில் குறைபாடு உள்ளதைக் கண்டார்; ஆனால், வீடு மற்றவருக்குச் சொந்தமானது என உரிமை கோரப்படவில்லை. அப்போது, இருபதாயிரம் வெள்ளிக்காசுகளைப் பெற்றுக்கொண்டு வீட்டை உரியவரிடம் திருப்பிக் கொடுத்துவிடுவார். (இது முன்னுக்குப்பின் முரணாகும். ஏனெனில், இவர் செலுத்தியதோ 9,999 வெள்ளிக் காசுகளும் ஒரேயொரு பொற்காசும்தான். திரும்பப் பெறுவதோ இருபதாயிரம் வெள்ளிக்காசுகள்.) அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: இவ்வாறு கூறும் இவர்கள் முஸ்லிம்களிடையே மோசடி நடைபெறுவதை அனுமதிக்கின்றனர். ஆனால், நபி (ஸல்) அவர்களோ, “முஸ்லிமின் வியாபாரத்தில் எந்தக் குறையோ, தீங்கோ, மோசடியோ இராது” என்று கூறினார்கள்.34 அத்தியாயம் :

6981அம்ர் பின் அஷ்ஷரீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூராஃபிஉ (ரலி) அவர்களிடம் சஅத் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஒரு வீட்டை நானூறு பொற்காசுகளுக்கு விலைபேசினார்கள். (வீட்டின் உரிமையாளர்) அபூராஃபிஉ (ரலி) அவர்கள் ‘அண்மையில் இருப்பதால் அண்டை வீட்டாரே அதிக உரிமைபடைத்தவராவார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிராவிட்டால் உங்களுக்கு நான் (இந்த வீட்டை) வழங்கியிருக்கமாட்டேன் என்று சொன்னார்கள். அத்தியாயம் :

ஆதாரம்: Sahih al Bukhari

WEBREATH · 11:11

«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath