ஹதீஸ்
பின்செல்

ஸஹீஹ் அல்-புகாரி 53 · Peacemaking

2690சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அம்ர் பின் அவ்ஃப் குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்குள் ஏதோ தகராறு இருந்து வந்தது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன், அவர்களிடையே சமாதானம் செய்துவைப்பதற்காக அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள். (நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்றிருந்த போது) தொழுகை நேரம் வந்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் இன்னும் (திரும்பி) வரவில்லை. அப்போது பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். (அதன் பிறகும்) நபி (ஸல்) அவர்கள் வரவில்லை. ஆகவே, பிலால் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, ‘‘நபி (ஸல்) அவர்கள் (வேலையின் காரணத்தால் உடனே வர முடியாமல்) தடுக்கப்பட்டுள்ளார்கள். தொழுகை நேரம் வந்துவிட்டது. ஆகவே, தாங்கள் மக்களுக்கு(த் தலைமை தாங்கி)த் தொழுவிக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘சரி, நீங்கள் விரும்பினால் தொழுவிக்கிறேன்” என்று கூறினார்கள். உடனே பிலால் (ரலி) அவர்கள் தொழுகைக்கு யிஇகாமத்’ சொல்ல, அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவிப் பதற்காக) முன்னே சென்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் வரிசைகளுக்கிடையே நடந்து வந்து, இறுதியில் முதல் வரிசையில் நின்றார்கள். உடனே மக்கள் கைதட்டத் தொடங்கி, இறுதியில் கைத்தட்டலை அதிகரித்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகை யின்போது திரும்பிப் பார்க்காதவராக இருந்தார்கள். இருந்தாலும் (மக்கள் கைதட்டும் ஓசையைக் கேட்டு) திரும்பிப் பார்த்தார்கள். அங்கே தமக்குப் பின்னே நபி (ஸல்) அவர்கள் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கிச் சைகை செய்து, அப்படியே தொழுவிக்கும் படி கட்டளையிட்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது கையை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து, திரும்பாமல் அப்படியே பின் வாக்கில் நகர்ந்து, இறுதியில் வரிசைக்குள் புகுந்துகொண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் முன்னால் சென்று மக்களுக்குத் தொழுவித்தார்கள். தொழுது முடித்தபின் மக்களை நோக்கி, ‘‘மக்களே! நீங்கள் தொழுகையில் ஏதேனும் (ஆட்சேபகரமான விஷயத்தைக் காண) நேர்ந்தால் கைதட்டத் தொடங்கிவிடுகிறீர்கள். பெண்கள்தான் கைதட்ட வேண்டும். (ஆண்களில்) ஒருவர் தொழுகையில் ஏதேனும் (ஆட்சேபணைக் குரிய விஷயத்தைக்) காண நேர்ந்தால், அவர் யிசுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ்வே தூய்மையானவன்) என்று கூறட்டும். ஏனெனில், அதைக் கேட்பவர் எவரும் திரும்பிப் பார்க்காமல் இருக்கமாட்டார்” என்று கூறிவிட்டு, ‘‘அபூபக்ரே! நான் உங்களுக்குச் சைகை செய்தபோது நீங்கள் ஏன் மக்களுக்குத் தொழுவிக்கவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுவிப்பதற்கு அபூகுஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை” என்று பதிலளித்தார்கள்.2 அத்தியாயம் :

2691அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம், ‘‘தாங்கள் அப்துல்லாஹ் பின் உபையிடம் வந்தால் (நன்றாயிருக்கும்)” என்று கூறப்பட்டது.3 நபி (ஸல்) அவர்கள் அவரிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம் களும் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவரை நபி (ஸல்) அவர்கள் சென்றடைந்தபோது அவர், ‘‘தூர விலகிப் போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கழுதையின் துர் நாற்றம் எனக்குத் தொல்லை தந்துவிட்டது” என்று கூறினார். அப்போது அவர்களிடையே இருந்த அன்சாரி (தோழர்) ஒருவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கழுதை உன்னைவிட நல்ல வாசனையுடையதுதான்” என்று கூறினார். அப்துல்லாஹ்வுக்காக அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏச, அன்சாரியும் ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோப மடைந்தார்கள். அவர்கள் தங்களுக்கிடையே ஈச்சங் (கிளையின்) குச்சியாலும் கைகளாலும் செருப்புகளாலும் அடித்துக்கொண்டார்கள். அப்போது, ‘‘இறை நம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டால், அவர்களிடையே சமாதானம் செய்துவையுங்கள்” (49:9) எனும் வசனம் அருளப்பட்டது என்ற செய்தி எங்களுக்கு எட்டியது. அத்தியாயம் :

2692அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களிடையே சமாதானம் செய்து வைப்பவர் பொய்யர் அல்லர். அவர் (இங்கும் அங்கும்) நல்லதை லிபுனைந்துலி கூறுகிறார். இதை உம்மு குல்ஸூம் பின்த் உக்பா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2693சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: யிகுபா’வாசிகள் தமக்கிடையே சண்டை யிட்டுக்கொண்டனர்; ஒருவர் மீதொருவர் கற்களை வீசிக்கொள்ளுமளவுக்கு அவர் களது சண்டை இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர்கள், ‘‘நம்மை அழைத்துச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கிடையே சமாதானம் செய்துவைப்போம்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2694உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு பெண், தன் கணவனிடமிருந்து ஏற்படும் பிணக்கை அல்லது புறக்கணிப் பைப் பற்றி அஞ்சினால், அவ்விருவரும் தங்களுக்கிடையே சமாதானம் செய்து கொள்வதால் அவர்கள்மீது எந்தக் குற்றமு மில்லை” (4:128) எனும் குர்ஆன் வசனத் திற்கு விளக்கமளித்தபோது ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறுகூறினார்கள்: ஒரு மனிதன் தன் மனைவியிடம் தனக்கு மகிழ்வைத் தராத முதுமை உள்ளிட்டவற்றைக் கண்டு அவளைப் பிரிந்துவிட விரும்புவான். அப்போது அவள் ‘‘என்னை (உன் மணபந்தத்திலேயே) வைத்துக்கொள். (என் உரிமைகளில்) நீ விரும்பியதை எனக்குப் பங்கிட்டுத் தந்துவிடு” என்று சொல்வதை இது குறிக்கும். இருவரும் பரஸ்பரம் ஒத்துப் போய்விட்டார்கள் என்றால், இதில் தவறேதுமில்லை. அத்தியாயம் :

2695அபூஹுரைரா (ரலி) அவர்களும் ஸைத் பின் காலித் (ரலி) அவர்களும் கூறியதாவது: (ஒருமுறை) கிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று கேட்டார். அவருடைய எதிரி எழுந்து நின்று, ‘‘இவர் சொன்னது உண்மையே. எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். அந்தக் கிராமவாசி (எதிரியைச் சுட்டிக் காட்டி), ‘‘என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக்கொண்டிருந்தான். (அப்போது) இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். மக்கள் என்னிடம், யிஉன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்படவேண்டும்’ என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், யிஉம்முடைய மகனுக்கு நூறு சாட்டையடி களும், ஓராண்டுக் காலத்திற்கு நாடுகடத்தும் தண்டனையும்தான் கொடுக்கப்பட வேண்டும்’ என்று தீர்ப்புக் கூறினார்கள்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: அடிமைப் பெண்ணும் ஆடுகளும் உம்மிடம் திருப்பித்தரப்பட வேண்டும்; உம்முடைய மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடுகடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, ‘‘உனைஸே! இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராக” என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ், அப்பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை அளித்தார். அத்தியாயம் :

2697அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில், அதில் இல்லாத ஒன்றை யார் புதிதாக உண்டாக்குகிறாரோ அது நிராகரிக்கப் பட்டதாகும். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2698பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா குறைஷியரான)ஹுதைபியாக் காரர்களிடம் (ஹுதைபியா எனுமிடத்தில்) சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டபோது அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், அவர்களிடையிலான ஒப்பந்தப் பத்திரத்தை எழுதினார்கள். அப்போது, ‘அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்’ என்று அவர்கள் எழுதியவுடன், இணைவைப்பாளர்கள், ‘அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்’ என்று எழுதாதீர்கள் (என்று சொல்லிவிட்டு, முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி), ‘‘நீர் அல்லாஹ்வின் தூதராக இருந்திருந்தால் நாங்கள் உம்முடன் போரிட்டிருக்கமாட்டோம்” என்று கூறினர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், ‘‘அதை அழித்து விடுங்கள்” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ‘‘நான் அதை (ஒருபோதும்) அழிக்கப்போவதில்லை” என்று கூறி விட்டார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அதை அழித்தார்கள். நானும் என் தோழர்களும் (மக்கா நகரில் அடுத்த ஆண்டு) மூன்று நாட்கள் தங்குவோம். அதில் நாங்கள், யிஜுலுப்பானுஸ் ஸிலாஹ்’ உடன்தான் நுழைவோம் என்று அவர் களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். மக்கள், ‘‘ஜுலுப்பானுஸ் ஸிலாஹ் என்றால் என்ன?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அவர்கள், யிஉறைக்கு உள்ளே இருக்கும் ஆயுதங்கள்’ என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

2699பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்ய (மக்கா நோக்கி)ச் சென்றார்கள். மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களை மக்காவிற்குள் நுழையவிட மறுத்தார்கள். இறுதியில், நபி (ஸல்) அவர்கள், மக்காவில் (வரும் ஆண்டில்), தாம் (தம் தோழர்களுடன்) மூன்று நாட்கள் தங்க (அனுமதிக்க) வேண்டும் என்று மக்காவாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். ஒப்பந்தத்தை அவர்கள் எழுதியபோது, ‘‘இது அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம்” என்று எழுதினார்கள். உடனே மக்காவாசிகள், ‘‘நாங்கள் இதை ஒப்புக்கொள்ளமாட்டோம்; நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் அறிந்திருப்போமாயின் உங்களை (மக்காவில் நுழைய விடாமல்) தடுத்திருக்கமாட்டோம். ஆயினும், நீங்கள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுதான்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதராவேன்; அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதும் ஆவேன்” என்று பதிலளித்துவிட்டு, அலீ (ரலி) அவர்களை நோக்கி, ‘அல்லாஹ்வின் தூதர்’ என்பதை அழித்துவிடுங்கள் என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ‘‘முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தங்கள் (தகுதியைக் குறிக்கும்) பெயரை ஒருபோதும் அழிக்கமாட்டேன்” என்று கூறிவிட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்திரத்தை எடுத்து, ‘‘இது அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மத் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம் ஆகும். (முஸ்லிம்களின்) ஆயுதம் எதுவும் உறையிலிருந்தபடியே தவிர, மக்காவினுள் நுழையாது. மக்கா வாசிகளில் எவரும் முஹம்மதைப் பின்தொடர்ந்து வர விரும்பினாலும்கூட, அவரை முஹம்மத் தம்முடன் அழைத்துச்செல்லக் கூடாது. மேலும், தம் தோழர்களில் எவரும் மக்காவில் தங்கிவிட விரும்பினால் அவரை முஹம்மத் தடுக்கக் கூடாது” என்று எழுதினார்கள். (அடுத்த ஆண்டு) நபி (ஸல்) அவர்கள் மக்காவினுள் நுழைந்தபோது (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) தவணை(யான மூன்று நாட்கள்) கழிந்தவுடன் மக்கா வாசிகள் அலீ (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘உங்கள் தோழரிடம் எங்களை (எங்கள் நகரை)விட்டு வெளியேறும்படி கூறுங்கள். ஏனெனில், தவணைக் காலம் கழிந்துவிட்டது” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களும் (மக்காவைவிட்டுப்) புறப்பட்டார்கள். அப்போது (உஹுத் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா (ரலி) அவர்களின் (அனாதை) மகள், ‘‘என் தந்தையின் (பால்குடி) சகோதரரே! என் தந்தையின் சகோதரரே!” என்று (கூறிக்கொண்டே) முஸ்லிம்களைப் பின்தொடர்ந்து வந்தாள். அலீ (ரலி) அவர்கள் அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளது கையைப் பிடித்துக்கொண்டார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடம், ‘‘இவளை எடுத்துக்கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளைத் தூக்கிவை” என்று கூறி னார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் (மதீனா வந்தபின்) அலீ (ரலி) அவர்களும், ஸைத் பின் அல்ஹாரிஸா (ரலி) அவர்களும், ஜஅஃபர் (ரலி) அவர்களும் (ஒவ்வொரு வரும், ‘அவளை நான்தான் வளர்ப்பேன்’ என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்(டு சச்சரவிட்டுக்கொண்)டனர். அலீ (ரலி) அவர்கள், ‘‘நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் தந்தையின் சகோதரர் மகள்” என்று கூறினார்கள். ஜஅஃபர் (ரலி) அவர்கள், ‘‘இவள் என் தந்தையின் சகோதரர் மகள். இவளுடைய சிற்றன்னை என் (மணபந்தத் தின்)கீழ் இருக்கிறார்” என்று கூறினார்கள். ஸைத் (ரலி) அவர்கள், ‘‘(இவள்) என் (நட்புறவு) சகோதரரின் மகள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்குச் சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர் (ரலி) அவர்கள் அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித் தார்கள். மேலும், ‘‘சிற்றன்னை தாயின் இடத்தில் இருக்கிறார்” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்களிடம், ‘‘நீர் என்னைச் சேர்ந்தவர்; நான் உம்மைச் சேர்ந்தவன்” என்று (ஆறுதலாகக்) கூறினார்கள். ஜஅஃபர் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கின்றீர்கள்” என்று சொன்னார்கள். ஸைத் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் எம் சகோதரர்; எம்(மால் விடுதலை செய்யப்பட்ட, எமது பொறுப்பிலுள்ள) அடிமை (ஊழியர்)” என்று கூறினார்கள். அத்தியாயம் :

2700பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா நிகழ்ச்சியின்போது6 நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களுடன் மூன்று அம்சங்களின் பேரில் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அவையாவன: 1. நபி (ஸல்) அவர்கள், இணைவைப் பாளர்களிடமிருந்து தம்மிடம் (மதீனாவுக்கு) வருபவரை, அவர்களிடமே திருப்பி யனுப்பிவிட வேண்டும். தங்களிடம் (மக்காவிற்கு) வரும் முஸ்லிம்களை இணைவைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களிடம் திருப்பியனுப்பமாட்டார்கள். 2. நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அடுத்த ஆண்டு (உம்ரா செய்ய) மக்காவினுள் நுழைந்து மூன்று நாட்கள் (மட்டும்) தங்கலாம். 3. (ஆனால்,) வாள், வில் போன்ற ஆயுதங்களை உறையிலிட்டுக் கொண்டு தான் உள்ளே நுழைய வேண்டும். இந்தச் சமாதான ஒப்பந்தம் பேசப் பட்டுக்கொண்டிருந்தபோது அபூஜந்தல் (ரலி) அவர்கள், தமது (கால்) சங்கிலி களுடன் தத்தித் தத்தி (நடந்து) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர் களிடமே அவரைத் திருப்பியனுப்பிவிட்டார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: முஅம்மல் (ரஹ்) அவர்கள் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்த அறிவிப்பில் அபூஜந்தல் (ரலி) அவர்களைக் குறித்த நிகழ்ச்சியைக் குறிப்பிடவில்லை. அத்தியாயம் :

2701இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிஉம்ரா’ செய்யும் நோக்கத்தில் (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள். அவர்களை குறைஷி இறைமறுப்பாளர்கள் இறை யில்லம் கஅபாவிற்குச் செல்ல விடாமல் தடுத்துவிட்டனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் யிஹுதைபியா’ எனும் இடத்தில் தமது குர்பானி பிராணியை அறுத்து (பலியிட்டு)விட்டுத் தமது தலையை மழித்துக்கொண்டார்கள். மேலும், ‘‘வரும் ஆண்டில், நான் (என் தோழர்களுடன்) உம்ரா செய்ய அனுமதிக் கப்பட வேண்டும்; வாள்களைத் தவிர வேறு ஆயுதங்களை நாங்கள் எடுத்து வரமாட்டோம்; குறைஷியர் விரும்புகின்ற வரை மட்டுமே மக்காவில் தங்கியிருப் போம்” என்னும் நிபந்தனையின் பேரில் குறைஷியருடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அவர்களிடம் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தத்தின்படியே (அடுத்த ஆண்டு மக்கா நகரினுள்) நுழைந்தார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்கி (முடித்து) விட்டபோது, குறைஷியர் நபி (ஸல்) அவர்களை (மக்காவைவிட்டு) வெளி யேறும்படி உத்தரவிட, நபி (ஸல்) அவர்களும் வெளியேறிவிட்டார்கள். அத்தியாயம் :

2702சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் (ரலி) அவர்களும் கைபரை நோக்கிச் சென்றார்கள். கைபர் அப்போது முஸ்லிம்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது.7 அத்தியாயம் :

2703அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தையின் சகோதரிலிருபய்யிஉ பின்த் நள்ர்,லிஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அப் பெண்ணின் குலத்தாரிடம் என் குலத்தார், ‘‘இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள்; அல்லது (ருபய்யிஉவை) மன்னித்துவிடும்படி சொல்லுங்கள்” என்று கோரினார்கள். அவர்கள் (இரண்டில் எதற்குமே ஒப்புக்கொள்ள) மறுத்துவிட் டார்கள். ஆகவே, எங்கள் குலத்தார் நபி (ஸல்) அவர்களிடம் (விவரம் கூறி, தீர்ப்புப் பெற) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ருபய்யிஉவைப்) பழிவாங்கும்படி அவர்களுக்கு உத்தர விட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (என் சகோதரி) ருபய்யிஉவின் முன்பல் உடைக்கப்படுமா? அப்படி நடக்காது. தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பிவைத்தவனின் மீது சத்தியமாக! அவளது முன்பல் உடைக்கப்படாது” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும். (ஆகவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)” என்று கூறினார்கள். பிறகு அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக்கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்துவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி)விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகின்றான்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் மர்வான் பின் முஆவியா அல்ஃபஸாரீ (ரஹ்) அவர்களது அறிவிப் பில், ‘‘(அந்த இளம்பெண்ணின்) குலத்தார் (பழிவாங்காமல் விட்டுவிட) ஒப்புக் கொண்டு பரிகாரத் தொகையை ஏற்றுக்கொண்டார்கள்” என்று வந்துள்ளது. அத்தியாயம் :

2704ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்களின் மகனான ஹசன் (ரலி) அவர்கள்,8 மலைகள் போன்ற (பிரமாண்டமான) படைகளுடன் முஆவியா (ரலி) அவர்களை எதிர்கொண்டார்கள். (அவற்றைக் கண்ட முஆவியா (ரலி) அவர்களின் ஆலோசகர்) அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், ‘‘நான் பெரும் படைகளைக் காண்கிறேன். அவை தமக்கொத்த படையை வீழ்த்தாமல் திரும்பாது” என்று (போர் புரிவதைத் தூண்டும் வகையில்) கூறினார்கள். அவருக்கு முஆவியா (ரலி) அவர்கள் லிஅல்லாஹ்வின் மீதாணையாக! (அம்ர், முஆவியா ஆகிய) அவ்விருவரில் முஆவியாவே, சிறந்தவராக இருந்தார்லி ‘‘அம்ரே! இவர்கள் அவர்களையும் அவர்கள் இவர்களையும் கொன்றுவிடுவார் களாயின் மக்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்க என்னிடம் வேறு யார் இருப்பார்கள்? (என் குடி)மக்களின் பெண்களைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார் இருப்பார்கள்? அவர்களின் சொத்துகளைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார்தான் இருப்பார்கள்?” என்று கேட்டார்கள். எனவே, ஹசன் (ரலி) அவர்களிடம் குறைஷியரில் பனூ அப்தி ஷம்ஸ் கிளையைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்களையும், அப்துல்லாஹ் பின் ஆமிர் பின் குரைஸ் (ரலி) அவர்களையும் அனுப்பி, ‘‘நீங்கள் இருவரும் இந்த மனிதரிடம் (ஹசனிடம்) சென்று விவரத்தை எடுத்துரைத்துப் பேசி, அவரிடம் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) கோருங்கள்” என்று கூறினார்கள். அவ்விருவரும் (அவ்வாறே) ஹசன் (ரலி) அவர்களிடம் சென்று, அவர்களின் அறைக்குள் நுழைந்து பேசினார்கள்; ஹசன் (ரலி) அவர்களிடம் (முஆவியா (ரலி) அவர்களின் தூதை எடுத்துச்) சொல்லி (அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வரும்படி) கோரினார்கள். அதற்கு அவ்விருவரிடமும் ஹசன் (ரலி) அவர்கள், ‘‘நாங்கள் அப்துல் முத்தலிபின் மக்கள்; இந்தச் செல்வத்தை (எங்கள் தலைமையின் காரணத்தால்) பெற்றிருக்கிறோம். (அதை எங்கள் குடிமக்கள், படைவீரர்கள் மற்றும் ஆதரவாளர் களிடையே செலவு செய்துவருகிறோம்.) இந்தச் சமுதாயமோ தன் இரத்தத்தைச் சிந்துவதில் தீவிரமாகிவிட்டது (பொருளின்றி அதைத் தடுக்க முடியாது)” என்று கூறினார்கள். இதற்கு அவ்விருவரும், ‘‘முஆவியா (ரலி) அவர்கள் உங்களுக்கு இவ்வளவு (மானியம்) தருவதாகக் கூறுகிறார்கள்; (சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளும்படி) உங்களிடம் கோருகிறார்கள்” என்று கூறினர். அதற்கு ஹசன் (ரலி) அவர்கள், ‘‘இந்த விஷயத்தில் எனக்குப் பொறுப்பு யார்?” என்று கேட்க, அவ்விருவரும் ‘‘இதில் உங்களுக்கு நாங்கள் பொறுப்பு” என்று கூறினர். ஹசன் (ரலி) அவர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள், ‘‘நாங்கள் உங்களிடம் இதற்குப் பொறுப் பேற்கிறோம்” என்றே அவ்விருவரும் கூறினார்கள். இறுதியாக, ஹசன் (ரலி) அவர்கள், முஆவியா (ரலி) அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண் டார்கள். அபூபக்ரா (ரலி) அவர்கள் பின்வருமாறு சொல்ல நான் கேட்டேன்: மேலும், (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீதிருக்க, அவர்களின் ஒரு பக்கத் தில் ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் அமர்ந்திருக்க, நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மக்களை நோக்கியும், மற்றொரு முறை ஹசன் (ரலி) அவர்களை நோக்கியும் (உரை நிகழ்த்திய வண்ணம்), ‘‘இந்த என் (புதல்வியின்) புதல்வர் தலைவர் ஆவார். முஸ்லிம்களின் இரு பெரும் கூட்டத்தாரிடையே இவர் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்துவைக்கவிருக் கிறான்” என்று கூறிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: அபூபக்ரா (ரலி) அவர்களிடம் ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் (நேரடியாகக்) கேட்ட செய்தி இந்த ஹதீஸின் மூலம்தான் நமக்கு உறுதியானது என அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அத்தியாயம் :

2705ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வீட்டின்) வாசலருகே (இருவர்) சச்சரவிட்டுக்கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். சச்சரவிட்டுக்கொண்டிருந்த வர்களின் குரல்கள் உயர்ந்தன. அவ்விரு வரில் ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் சற்றுக் குறைத்து வாங்கிச் செல்லும்படியும், மென்மையாக நடந்துகொள்ளும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு மற்றவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவ்வாறு செய்யமாட்டேன்” என்று கூறிக் கொண்டிருந்தார். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று, ‘‘நன்மை(யான செயலைச்) செய்யமாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறியவர் எங்கே?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், ‘‘நான்தான் அல்லாஹ்வின் தூதரே! (நான் என் சத்தியத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்;) அவர் எதை விரும்புகிறாரோ அது அவருக்குக் கிடைக்கும்” என்று கூறினார். அத்தியாயம் :

2706கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் சிறிது பணம் தர வேண்டியிருந்தது. ஆகவே, அவரை நான் சந்தித்து (கடனை அடைக்கச் சொல்லி) நச்சரித்தேன். (எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் குரல்கள் உயர்ந்தன. நபி (ஸல்) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, யிகஅபே!› என்று கூறி யிபாதி’ (யிபாதி கடனைத் தள்ளுபடி செய்துவிடு’) என்பது போல் தமது கரத்தால் சைகை செய்தார்கள். அவ்வாறே பாதியைப் பெற்றுக்கொண்டு, பாதியைத் தள்ளுபடி செய்துவிட்டேன். அத்தியாயம் :

2707அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள், சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமே. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2708ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரில் கலந்துகொண்ட அன்சாரி ஒருவருடன் எனக்கு (மதீனாவின்) ‘அல்ஹர்ரா’ எனும் (கருங்கல் பூமியிலுள்ள) ஒரு கால்வாய் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் அந்தக் கால்வாயிலிருந்தே எங்கள் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சிவந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுசென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘ஸுபைரே! (முதலில்) நீங்கள் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு, பிறகு உங்கள் அண்டையிலிருப்பவருக்கு அதை அனுப்பிவிடுங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட அந்த அன்சாரி கோப மடைந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்கள் அத்தையின் மகன் என்பதாலா (இப்படித் தீர்ப்புக் கூறினீர்கள்)?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத் தால் சிவந்து) நிறம் மாறியது. பிறகு அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி, ‘‘ஸுபைரே! (முதலில்) நீங்கள் தண்ணீர் பாய்ச்சிக்கொள்ளுங்கள். பிறகு வரப்புகளை எட்டும்வரை தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். இவ்வாறு ஸுபைர் (ரலி) அவர்களுக்கு, அன்னாருடைய முழு உரிமையையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குமுன் ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் அந்த அன்சாரிக்கும் தாராளமாகப் பயன் தரும் விதத்தில் ஸுபைர் (ரலி) அவர்களிடம் யோசனை தெரிவித்திருந்தார்கள். ஆனால், அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கோபமூட்டியபோது ஸுபைர் (ரலி) அவர்களுக்கு, அவர்களின் உரிமையை தெளிவான ஆணையின் மூலம் முழுமையாக வழங்கிவிட்டார்கள். ‘‘ ‘(நபியே!) உம்முடைய இறைவன் மீதாணையாக! அவர்கள் தமக்குள் ஏற்பட்ட வழக்கில் உம்மை நீதிபதியாக்கி, பின்னர் நீர் வழங்கும் தீர்ப்பால் தம் உள்ளங்களில் எந்த அதிருப்தியும் கொள்ளாமல் (அதற்கு) முழுமையாகக் கட்டுப்படாத வரை இறைநம்பிக்கை கொண்டவர்களாக ஆகமாட்டார்கள் (4:65) எனும் வசனம் இது தொடர்பாகவே இறங்கியதாக நான் நினைக்கிறேன்” என்று ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

2709ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை தம்மீது கடன் (சுமை) இருந்த நிலையில் இறந்துவிட்டார். ஆகவே, நான் அவருக்குக் கடன் கொடுத்தவர்களிடம் என் தந்தை மீதிருந்த கடனுக்குப் பதிலாகப் பேரீச்சங்கனிகளை எடுத்துக்கொள்ளும்படி சொன்னேன். அவர்கள் மறுத்துவிட்டார்கள். அப்படி எடுத்துக்கொள்வதால் (தமது) உரிமை முழுமையாக நிறைவேறாது என்று அவர்கள் கருதினார்கள். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அதைக் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ அதைப் பறித்துக் களத்தில் (காய) வைக்கும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (என்னிடம்) தெரிவிப்பீராக!” என்று கூறினார்கள். (பிறகு நான் அவ்வாறே தெரிவிக்க) நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடனும் உமர் (ரலி) அவர்களுடனும் வருகை தந்தார்கள். அந்தப் பழத்தின் அருகே அமர்ந்து வளம் வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, ‘‘உன் (தந்தைக்குக்) கடன் கொடுத்தவர்களை அழைத்து அவர்களுக்கு நிறைவாகக் கொடு” என்று கூறினார்கள். என் தந்தை யாருக்கெல்லாம் கடனைத் திருப்பித் தரவேண்டியிருந்ததோ அவர்களில் ஒருவரையும் விடாமல் கடனை அடைத்து விட்டேன். (அவ்வாறிருந்தும்) பதின்மூன்று யிவஸ்க்’ பேரீச்சங்கனிகள் எஞ்சிவிட்டன. யிஏழு வஸ்க்குகள் ‘அஜ்வா’ (எனும் மதீனாவின் உயர் ரகப்) பேரீச்சம் பழமும், ஆறு யிவஸ்க்’குகள் யிலவ்ன்’ எனும் மற்ற வகைப் பேரீச்சம் பழங்களும்’, அல்லது யிஏழு யிவஸ்க்’குகள் லவ்னும் ஆறு வஸ்க்குகள் அஜ்வாவும் மீதமாகிவிட்டன. (அன்று) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுகையை நிறைவேற்றிவிட்டு, இந்த விஷயத்தை அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் சிரித்துவிட்டு, ‘‘அபூபக்ரிடமும் உமரிடமும் சென்று தெரிவி” என்று கூறினார்கள். (நானும் அவ்வாறே தெரிவித்தேன்.) அதற்கு அவர்கள் இருவரும், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வளம் வேண்டி பிரார்த்தனை செய்த நேரத்திலேயே இதுதான் நடக்கும் என்று நாங்கள் அறிந்துகொண்டோம்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘அஸ்ர்’ தொழுகை என இடம்பெற்றுள்ளது. அபூபக்ர் (ரலி) அவர்கள் பற்றியோ நபியவர்கள் சிரித்தது பற்றியோ அதில் குறிப்பு இல்லை. மேலும், என் தந்தை முப்பது யிவஸ்க்’குகள் கடனை விட்டுச்சென்றார் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், யிலுஹ்ர்’ தொழுகை என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

2710கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் எனக்கு இப்னு அபீ ஹத்ரத் (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலில் வைத்துத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். (எங்கள்) இருவரின் குரல்களும் உயர்ந்தன. வீட்டிலிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கேட்டு விட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். தமது அறையின் திரையை விலக்கி, ‘கஅபே!’ என்றழைத் தார்கள். நான், ‘‘இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘பாதிக் கடனைத் தள்ளுபடி செய்துவிடு’ என்று தம் கரத்தால் சைகை காட்டினார்கள். ‘‘அவ்வாறே செய்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கூற, இப்னு அபீஹத்ரத் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் எழுந்து சென்று அவரது கடனை அடையுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.10 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

ஆதாரம்: Sahih al Bukhari

WEBREATH · 11:11

«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath