ஹதீஸ்
பின்செல்

ஸஹீஹ் அல்-புகாரி 49 · Manumission of Slaves

2517அலீ பின் ஹுசைன் (ரஹ்)2 அவர்களின் தோழரான சயீத் பின் மர் ஜானா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு முஸ்லிமான (அடிமை) மனிதரை யார் விடுதலை செய்கிறாரோ, (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ் வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து (விடுவித்துக்) காப்பாற்று வான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக என்னிடம் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். உடனே நான், இந்த நபிமொழியை அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்களிடம் கொண்டுசென்றேன். இதைக் கேட்ட அன்னார் தம் அடிமை ஒருவரை விடுதலை செய்ய விரும்பினார்கள். அந்த அடிமைக்கு (விலையாக) அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் பத்தாயிரம் திர்ஹங்களையோ ஆயிரம் தீனார்களையோ அன்னாரிடம் கொடுத்திருந்தார்கள். அவ்வாறிருந்தும் (அந்தப் பணத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு) அந்த அடிமையை அன்னார் விடுதலை செய்துவிட்டார்கள். அத்தியாயம் :

2518அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘எந்த நற்செயல் சிறந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் அவனது பாதை யில் அறப்போர் புரிவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் உரிமை யாளர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் (தான் சிறந்தவர்கள்)” என்று பதிலளித் தார்கள். நான், ‘‘என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லை யென்றால்?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘பலவீனருக்கு உதவி செய்; அல்லது வேலை இல்லாதவனுக்கு வேலை கொடு!” என்று கூறினார்கள். நான், ‘‘இதுவும் என்னால் இயலவில்லையென் றால்...?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்கு செய்துகொள்ளும் ஒரு தர்மம் ஆகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

2519அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2520அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் சந்திர (அல்லது சூரிய) கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி கட்டளையிடப் பட்டிருந்தோம். அத்தியாயம் :

2521நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: இருவருக்குக் கூட்டான ஓர் அடிமையை (அவ்விருவரில்) ஒருவர் விடுதலை செய்தால், அவர் வசதியானவராக இருக்கும்போது அந்த அடிமைக்கு (நியாயமான) விலை மதிப்பிடப்பட்டு (அதையும் அவரே செலுத்தி) பின்னர் அவன் விடுதலை செய்யப்பட வேண்டும். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3 அத்தியாயம் :

2522அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்கிறாரோ அவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால், அந்த அடிமைக்கு நியாயமான விலை நிர்ணயிக்க வேண்டும். பிறகு அவர் தம் பங்காளிக்கு, அவர்களுக்கான பங்குத் தொகைகளை கொடுத்துவிட்டு, அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்துவிட வேண்டும். இல்லையென்றால், அவர் எந்த அளவுக்கு விடுதலை செய்தாரோ, அந்த (பங்கின்) அளவிற்குத்தான் விடுதலை செய்தவர் ஆவார். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2523அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்கிறாரோ அவரிடம் அவ்வடிமையின் (முழு) விலையை எட்டுகின்ற அளவிற்குச் செல்வம் இருந் தால், அந்த அடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவரது பொறுப்பாகும். அந்த அடிமைக்கு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் விலை(யைச் செலுத்தும்) அளவுக்கு அவரிடம் செல்வம் இல்லை யென்றால், அவர் விடுதலை செய்த அந்த (பங்கின்) அளவுக்கு மட்டுமே அவ்வடிமை விடுதலை செய்யப்படுவார். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2524நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்தாரோ அவரிடம் அந்த அடிமையின் நியாய விலையை எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால் அவன் (முழுவதுமாக) விடுதலை செய்யப்படுவான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மேலும், ‘‘அவ்வாறு (முழுவதுமாக விடுதலை) செய்ய இயலாவிட்டால், அவர் விடுதலை செய்த (பங்கின்) அளவுக்கே அந்த அடிமையை விடுதலை செய்தவர் ஆவார்” என்று இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ‘‘இது நாஃபிஉ (ரஹ்) அவர்களின் கூற்றா; அல்லது நபிமொழியின் ஒரு பகுதியா என்பது எனக்குத் தெரியாது” என்று அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். அத்தியாயம் :

2525நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பங்குதாரர்கள் பலருக்கும் கூட்டான ஓர் அடிமையில் அல்லது அடிமைப் பெண்ணில் தமது பங்கை (பங்குதாரர்களில்) ஒருவர் விடுதலை செய்வது தொடர்பாக இப்னு உமர் (ரலி) அவர்கள் தீர்ப்பு வழங்கிவந்தார்கள். அத்தீர்ப்பில், ‘‘(தமது பங்கை) விடுதலை செய்தவர்மீது அவ்வடிமையை முழுவது மாக விடுதலை செய்வது கடமையாகும். அவரிடம் அந்த அடிமையின் நியாயமான விலையை அடைகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால், (மற்ற) பங்குதாரர்களின் பங்குத் தொகையைக் கொடுத்துவிட்டு, விடுதலை செய்யப்பட்ட அடிமை சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்” என்று சொல்லிவந்தார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்தே இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்து வந்தார்கள். இதே ஹதீஸ் சுருக்கமாக இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் ஆறு தொடர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :

2526நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: எவர் ஓர் அடிமையிலுள்ள (தமது) பங்கை விடுதலை செய்துவிட்டாரோ அவர்... (என்று ஹதீஸ் தொடங்கி அடுத்த ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம் பெறு கின்றன.) இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2527நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: எவர் ஓர் அடிமையில் (தமக்குள்ள) ஒரு பங்கை விடுதலை செய்கிறாரோ அவரிடம் (போதிய) செல்வம் இருக்கு மாயின், தமது செல்வத்திலிருந்தே அவ்வடிமையை (முழுவதுமாக) விடுதலை செய்வது அவர்மீது கடமையாகும். (அவரிடம் போதிய செல்வம்) இல்லை யெனில், அவ்வடிமைக்கு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். (மீதித் தொகையைக் கட்டுவதற்கு வசதியாக) உழைப்பதற்கு அவ்வடிமை அனுமதிக் கப்பட வேண்டும்; அவனுக்கு அதிகமான சிரமத்தைத் தரக் கூடாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2528நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் (அதன்படி) செயல்படாத வரை அல்லது (அதை வெளிப்படுத்திப்) பேசாத வரை எனக்காக அல்லாஹ் மன்னிக்கின்றான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2529நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செயல்கள் (அனைத்தும்) எண்ணங் களைப் பொறுத்தே அமைகின்றன. ஒரு மனிதனுக்கு அவன் எதை எண்ணியிருந் தானோ அதுதான் கிடைக்கும். ஒருவர் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) செய்வாராயின் அவரது புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே அமையும். எவரது புலம்பெயர்தல், அவர் அடைந்து கொள்ளும் உலக ஆதாயம் ஒன்றுக் காகவோ அவர் மணந்து கொள்ளும் ஒரு பெண்ணுக்காகவோ இருக்குமானால் அவர் எதற்காக ஹிஜ்ரத் செய்தாரோ அதுதான் அவருக்குக் கிடைக்கும்.5 இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2530அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் இஸ்லாத்தை ஏற்க விரும்பி (நபி (ஸல்) அவர்களிடம்) சென்று கொண்டிருந்தபொழுது என்னுடன் என் அடிமையும் இருந்தார். (வழியில்) அவர் என்னையும் நான் அவரையும் பிரிந்து வழிமாறிச் சென்றுவிட்டோம். அதன் பிறகு, நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்துகொண்டிருந்தபொழுது அவ் வடிமை வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அபூஹுரைரா! இதோ, உங்கள் அடிமை உங்களிடம் வந்துவிட்டார் (பாரும்)” என்று கூறினார்கள். உடனே நான், ‘‘(அல்லாஹ் வின் தூதரே!) இந்த அடிமை சுதந்திர மாகிவிட்டார் என்பதற்கு நான் தங்களைச் சாட்சியாக ஆக்குகிறேன்” என்று கூறி னேன்.7 அறிவிப்பாளர் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த போது) பின்வரும் கவிதையைப் பாடிக்கொண்டே வந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது: எவ்வளவு நீண்ட களைப்பூட்டும் இரவு! இருந்தாலும், காத்தது அந்த இரவுதான்! இறைமறுப்பு இல்லத்திலிருந்து! அத்தியாயம் :

2531அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து மதீனாவிற்கு) நபி (ஸல்) அவர்களைக் காணவந்தபோது பாதையில், எவ்வளவு நீண்ட களைப்பூட்டும் இரவு! இருந்தாலும் காத்தது அந்த இரவுதான்! இறைமறுப்பு இல்லத்திலிருந்து! என்று பாடினேன். வழியில் என் அடிமை ஒருவன் என்னை விட்டுத் தப்பி யோடிவிட்டான். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்களிடம் நான் (இஸ்லாத்திற்கான) உறுதிமொழியளித்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தபோது அந்த (என்) அடிமை தென்பட்டான். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘அபூஹுரைரா! இதோ உங்கள் அடிமை!” என்று கூறி னார்கள். நான், ‘‘அவன் (இன்று முதல்) சுதந்திரமானவன்; அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்காக” என்று கூறி, அவனை விடுதலை செய்துவிட்டேன். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகின்றேன்: இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், யிசுதந்திரமானவன்’ எனும் சொல் இடம்பெறவில்லை. அத்தியாயம் :

2532கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தேடி (நபி (ஸல்) அவர்களை நோக்கி மதீனா) வந்தபோது, அவர்களுடன் ஓர் அடிமையும் இருந்தார். அவர்கள் பாதையறியாமல் ஒருவரையொருவர் பிரிந்து போய்விட்டார்கள்... பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) இவ்வடிமை அல்லாஹ்விற்குரியவன் என்பதற்கு நான் தங்களையே சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

2533ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உத்பா பின் அபீவக்காஸ் தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களி டம், ஸம்ஆவின் அடிமைப் பெண்ணு டைய மகனைப் பற்றி, ‘‘அவன் என் மகன்” என்று கூறி, அவனைப் பிடித்து வரும்படி உறுதிமொழி வாங்கியிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது (மக்கா நகருக்கு) வந்திருந்த சமயம், சஅத் (ரலி) அவர்கள் ஸம்ஆவுடைய அடிமைப் பெண்ணின் மகனைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். ஸம்ஆவின் (சொந்த) மகன் அப்த் (ரலி) அவர்களையும் தம்முடன் அழைத்து வந்தார். பிறகு சஅத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரரின் மகன். என் சகோதரர் என்னிடம், இவன் தன் மகன் என்று (கூறி இவனை அழைத்து வர) உறுதிமொழி வாங்கியுள்ளார்” என்று கூறினார்கள். அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரன்; என் தந்தை ஸம்ஆவின் அடிமைப் பெண் பெற்றெடுத்த மகன்; என் தந்தையின் படுக்கையில் (என் தந்தையின் அதிகாரத்தில் இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்” என்று கூறினார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸம்ஆவின் அடிமைப் பெண் ணுடைய மகனைப் பார்த்தார்கள். அவன் மக்களில் உத்பாவிற்கு மிகவும் ஒப்பான வனாக இருந்ததைக் கண்டார்கள். (ஸம்ஆ வின் மகன் அப்த் (ரலி) அவர்களை நோக்கி) ‘‘அப்த் பின் ஸம்ஆவே! அவன் உனக்கே உரியவன்” என்று கூறினார்கள். அவன் அப்துவின் தந்தை ஸம்ஆவின் படுக்கையில் பிறந்தவன் எனும் காரணத்தால் இப்படிக் கூறினார்கள். (பிறகு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார் சவ்தா (ரலி) அவர்களை நோக்கி,) ‘‘ஸம்ஆவின் மகள் சவ்தாவே! இவன் பார்வையில் படாத வண்ணம் நீ திரையிட்டுக்கொள்” என்று கூறினார்கள். தோற்றத்தில் உத்பாவுக்கு ஒப்பாக அவன் இருந்ததைக் கண்ட காரணத்தால்தான் நபி (ஸல்) அவர்கள் இப்படிக் கட்டளையிட்டார்கள். சவ்தா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவியாக இருந்தார்கள்.10 அத்தியாயம் :

2534ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் ஒருவர் தம் அடிமை ஒருவனை பின்தேதியிட்டு விடுதலை செய்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையை அழைத்து (ஏலத்தில்) விற்றுவிட்டார்கள். அந்த அடிமை, (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களின் ஆட்சியின்) முதலாம் ஆண்டில் இறந்துவிட்டார்.12 அத்தியாயம் :

2535அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (முன்னாள்) அடிமைக்கு வாரிசாகின்ற உரிமையை விற்பதையும் (அன்பளிப்பாக) வழங்குவதையும் தடை செய்தார்கள். அத்தியாயம் :

2536ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (அடிமைப் பெண்ணான) பரீராவை விலைக்கு வாங்கினேன். அப்போது அவருடைய உரிமையாளர்கள், அவருக்கு வாரிசாகும் உரிமை தமக்கே உரியதாக இருக்க வேண்டும் என்று நிபந்தனையிட்டார்கள். நான் இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள், ‘‘அவளை விடுதலை செய்துவிடு! ஏனெனில், விலையைக் கொடுப்பவருக்கே (விடுதலை செய்பவருக்கே) வாரிசாகும் உரிமை உரியதாகும்” என்று கூறி னார்கள். நான் அவரை விடுதலை செய்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து, அவருடைய கணவர் விஷயத் தில் (அவருடன் வாழ்வது, அல்லது பிரிந்துவிடுவது ஆகிய இரண்டில்) எதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை வழங்கினார்கள். அதற்கு பரீரா, ‘‘அவர் எனக்கு எவ்வளவுதான் (கொட்டிக்) கொடுத்தாலும் அவரிடம் நான் இருக்கமாட்டேன்” என்று கூறி, (கணவனைப் பிரிந்து) தனித்து வாழ்வதையே தேர்ந்தெடுத்துக்கொண்டார். அத்தியாயம் :

2537அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘எங்கள் சகோதரி மகன் அப்பாஸ் (ரலி) அவர்களி டமிருந்து பிணைத் தொகை பெறாமல் நாங்கள் (அவரை) விட்டுவிடுகிறோம்; நீங்கள் எங்களுக்கு அனுமதி கொடுங்கள்” என்று அனுமதி கோரினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரிடமிருந்து ஒரு திர்ஹமைக்கூட (வாங்காமல்) விட்டுவிடாதீர்கள்” என்று கூறினார்கள்.16 அத்தியாயம் :

2538உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்; நூறு ஒட்டகங் களையும் அறுத்து தர்மம் செய்தார்கள். இவ்வாறே, அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியபோது (ஹஜ் செய்த நேரத்தில்) நூறு ஒட்டகங்களை அறுத்து தர்மம் (செய்து) நூறு அடிமைகளையும் விடுதலை செய்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் நன்மையை நாடியவனாக செய்துவந்த (தர்ம) காரியங் களைக் குறித்து தாங்கள் என்ன கருதுகின் றீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் செய்த நற்செயல்க(ளுக்கான நன்மை)களுடனேயே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்” என்று கூறினார்கள்.17 அத்தியாயம் :

2540மர்வான் பின் அல்ஹகம் மற்றும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் கூறியதாவது: (ஹுனைன் போருக்குப்பின் அரபுக் குலத்தாரான) யிஹவாஸின்’ குலத்தாரின் தூதுக் குழுவினர் (முஸ்லிலிம்களாகி) தம்மிடம் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். (போரில் தங்களிடமிருந்து முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்ட) தங்களின் செல்வங்களையும் போர்க் கைதிகளையும் தங்களிடமே திருப்பித் தந்துவிடும்படி நபியவர்களிடம் அவர்கள் கோரினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அக் குழுவினரிடம்), ‘‘என்னுடன் நீங்கள் பார்க்கின்ற(மற்ற)வர்களும் இருக்கின்றனர். உண்மையாகப் பேசுவதுதான் எனக்கு மிகவும் விருப்பமானது. ஆகவே, செல்வங் கள் அல்லது கைதிகள் இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நான் உங்களை எதிர் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பியது முதல், பத்து நாட்களாக அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இரண்டில் ஒன்றைத் தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகிவிட்டபோது, ‘‘நாங்கள் கைதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்” என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: இறைவாழ்த்துக்குப்பின்! உங்களுடைய (இந்தச்) சகோதரர்கள் மனம் திருந்தி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களிடம் அவர்களுடைய (குலத்தாரின்) கைதிகளைத் திருப்பித் தந்துவிடலாம் எனக் கருதுகிறேன். உங்களில் யார் மனப்பூர்வமாக இதைச் செய்ய (திருப்பித் தந்துவிட) விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும்! தமது பங்கு(க்குரிய கைதிகள்) தம்மிடமே இருக்க வேண்டுமென விரும்புபவர், அல்லாஹ் நமக்கு (இனி) கொடுக்கவிருக்கும் முதலாவது செல்வத்திலிருந்து அவருக்கு நாம் கொடுக்கும்வரை அவ்வாறே செய்யட்டும். (தம்மிடமே கைதிகளை வைத்துக் கொள்ளட்டும்.) (இதைச் செவியுற்றதும்) மக்கள், ‘யிநாங்கள் மனப்பூர்வமாக (கைதிகளைத்) திருப்பித் தந்துவிடுகிறோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் (இதற்கு மனப்பூர்வமாகச்) சம்மதிப்பவர் யார், சம்மதிக்காதவர் யார் என்பது நமக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்க ளுடைய தலைவர்கள் (உங்களுடன் கலந்துபேசி) உங்கள் முடிவை நம்மிடம் தெரிவிக்கட்டும் (பிறகு பார்த்துக் கொள்வோம்)” என்று கூறினார்கள். ஆகவே, மக்கள் திரும்பிச் சென்றனர். அவர்களுடைய தலைவர்கள் அவர்களு டன் (கலந்து) பேசினர். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, அவர்கள் மனமொப்பி சம்மதித்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுதான் ஹவாஸின் போர்க் கைதிகள் குறித்து நமக்கு எட்டிய செய்தியாகும்.20 அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நான் எனக்கும் அகீலுக்கும் பிணைத் தொகை கொடுத்துவிட்டேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

2541அப்துல்லாஹ் பின் அவ்ன் அல்முஸ்னீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்; அவர்கள் எனக்கு (பதில்) கடிதம் எழுதினார்கள். அதில் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டி ருந்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் யிபனூ முஸ்தலிக்’ குலத்தார் பாராமுகமாக இருந்தபோது, அவர்கள்மீது (திடீர்) தாக்குதல் நடத்தினார்கள்; அப்போது அவர்களின் கால்நடைகள் நீர்நிலை ஒன்றில் தண்ணீர் புகட்டப்பட்டுக்கொண்டிருந்தன. அவர் களில் போரிடும் திறன் பெற்றவர்களைக் கொன்றார்கள்; அவர்களுடைய மக்களை (பெண்கள், பிள்ளைகுட்டிகளை) போர்க் கைதிகளாக சிறைபிடித்தார்கள்; அன்று தான் ஜுவைரிய்யா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பெற்றார்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அவர்களும் அந்த (முஸ்லிம்) படையில் இருந்தார்கள்.21 அத்தியாயம் :

2542அப்துல்லாஹ் பின் முஹைரீஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களைப் பார்த்தபோது அவர்களிடம் (‘அஸ்ல்’ எனும் புணர்ச்சி இடைமுறிப்பு செய்வது பற்றி) கேட்டேன். அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் யிபனூ முஸ்தலிக்’ (குலத் தாருக்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது அரபுப் போர்க் கைதிகளில் சிலர் எங்களுக்குத் கிடைத்தனர். நாங்கள் (அந்தக் கைதிகளிடையேயிருந்த) பெண்களை (உடலுறவு கொள்ள) விரும்பினோம். ஏனெனில், (எங்கள் மனைவியரைப் பிரிந்து) தனிமையில் இருந்தது எங்களை வாட்டியது. மேலும், (இந்தப் பெண்களுடன் உடலுறவு கொள்ளும்போது) புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்ய நாங்கள் விரும்பினோம். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதுபற்றிக் கேட்டோம். அதற்கு, ‘‘நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமை நாள்வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்” என்று பதிலளித்தார்கள்.22 அத்தியாயம் :

2543அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிபனூ தமீம்’ குலத்தார் பற்றிக் கூறிய மூன்று விஷயங்களைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்க லானேன். (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர்கள் (பனூ தமீம் குலத்தார்) என் சமுதாயத்தாரிலேயே அதிகக் கடுமையுடன் (மகா பொய்யன்) தஜ்ஜாலை எதிர்த்துப் போராடுவார்கள்” என்று கூறினார்கள். (ஒருமுறை) பனூ தமீம் குலத்தாரின் தர்மப் பொருள்கள் வந்தபோது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவை எங்கள் இனத்தாரின் தர்மப் பொருள்கள்” என்று கூறினார்கள். (ஒருமுறை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் பனூதமீம் குலத்தாரின் பெண் போர்க் கைதி ஒருவர் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘நீ இந்தப் பெண்ணை விடுதலை செய்துவிடு. ஏனெனில், இவள் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததிகளில் ஒருத்தி” என்று கூறினார்கள்.23 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

2544அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்றுக் கொடுத்து, அவளை நல்ல முறையில் நடத்தி, பிறகு அவளை விடுதலை செய்து, தாமே அவளை மணமுடித்துக்கொள்கி றாரோ அவருக்கு இரு நன்மைகள் உண்டு. இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.24 அத்தியாயம் :

2545மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான், அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர் களை (ஒருமுறை) பார்த்தேன். அப்போது அவர்கள்மீது ஒரு (புதிய) மேலங்கியும் அவர்களின் அடிமைமீது (அதே போன்ற) ஓர் (புதிய) மேலங்கியும் இருந்தது. அதைப் பற்றி (இருவரும் ஒரே விதமான ஆடை அணிந்திருப்பது பற்றி) அபூதர் (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அப்போது அதற்கு அவர்கள் பின் வருமாறு சொன்னார்கள்: நான் ஒருவரை (அவருடைய தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன்; அவர் என்னைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) ‘‘நீர் இவருடைய தாயைக் குறித்துத் தரக்குறைவாகப் பேசினீரா” என்று கேட்டார்கள். பிறகு, ‘‘உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். ஆகவே, எவருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கிறாரோ அவர், தம் சகோதரருக்கு தாம் உண்பதிலிருந்து உண்ணத்தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்தே உடுத்தத்தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள்மீது சுமத்தாதீர்கள். அப்படி அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள்மீது நீங்கள் சுமத்தினால், (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

2546அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடிமை, தன் எசமானுக்கு விசுவாசமாக நடந்து, தன் இறைவனை நன்முறையில் வழிபடுவானாயின் அவனுக்கு இரு முறை(‘னாலும்) நன்மை கிடைக்கும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2547நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: எந்த மனிதரிடம் அடிமைப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் ஒழுக்கம் கற்பித்து, கல்வியையும் அழகிய முறையில் கற்றுக்கொடுத்து, அவளை விடுதலையும் செய்து, அவளைத் தாமே மணமும் புரிந்துகொள்கிறாரோ அவருக்கு இரு நன்மைகள் கிடைக்கும். எந்த அடிமை அல்லாஹ்வின் உரிமையையும் தன் எசமானர்களின் உரிமையையும் (ஒழுங்காக) நிறைவேற்றுகிறானோ அவ னுக்கும் இரு நன்மைகள் கிடைக்கும். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2548அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கு உடைமையான நல்ல அடிமைக்கு இரண்டு நன்மைகள் உண்டு. இதை அறிவித்துவிட்டு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘எவனது கையில் என் உயிர் இருக்கிறதோ அவன்மீது சத்திய மாக! அல்லாஹ்வின் பாதையில் அறப் போர் புரிவதும், ஹஜ்ஜும், என் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையும் இல்லாம லிருந்தால் நான் (ஒருவரின்) அடிமையாக இருக்கும் நிலையில் இறப்பதையே விரும்பியிருப்பேன்.” என்று சொன் னார்கள். அத்தியாயம் :

2549நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களில் ஒருவரின் அடிமை, தம் இறைவனை நன்முறையில் வழிபட்டு, தம் எசமானுக்கு விசுவாசமாக நடந்து கொண்டால், அவரே நல்லவர் ஆவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :

2550நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: அடிமை (அப்த்), தன் எசமானுக்கு (சய்யித்) விசுவாசமாக நடந்து, தன் இறைவனை நல்ல முறையில் வழிபட்டு வருவானாயின், அவனுக்கு இரு முறை(களிலும்) நன்மை கிடைக்கும்.26 இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2551நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: தன் இறைவனை நல்லமுறையில் வழிபட்டு, தன் எசமானுக்கு (சய்யித்) தான் செய்ய வேண்டிய கடமைகளை (ஒழுங் காக) நிறைவேற்றி, அவனுக்கு நலம் நாடி (நேர்மையாகவும் விசுவாசமாகவும் நடந்துகொண்டு) அவனுக்குக் கீழ்ப்படிந்தும் நடக்கின்ற அடிமைக்கு இரு நன்மைகள் கிடைக்கும். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அத்தியாயம் :

2552நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் (அடிமையிடம்) ‘‘உன் ரப்புக்கு (அதிபதிக்கு) உணவு கொடு, உன் ரப்புக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்ய உதவு, உன் ரப்புக்கு நீர் புகட்டு” என்று கூற வேண்டாம். யிஎன் தலைவர்; என் உரிமையாளர்’ என்று கூறட்டும். அவ்வாறே, உங்களில் யாரும், என் அடிமை; என் அடிமைப் பெண் என்று கூற வேண்டாம். ‘‘என் பணியாள்; என் பணிப்பெண்; என் பையன்” என்று கூறட்டும்.27 இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2553நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: எவர் ஓர் அடிமையில் (அப்த்) தமக்கிருக்கும் பங்கை விடுதலை செய்கிறாரோ, அவருக்கு அவ்வடிமையின் (முழு) விலையை எட்டுகின்ற அளவுக்குச் செல்வமிருந்தால், அவனுக்கு நியாயமான விலை மதிப்பிடப்பட்டு, தமது செல்வத்திலிருந்து (அதைச் செலுத்தி அவனை) முழுமையாக விடுவித்துவிட வேண்டும். இல்லையெனில், அவர் எந்த அளவுக்கு அவ்வடிமையை விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கே அவன் விடுதலை பெறுவான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2554அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளி களே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள்மீது ஆட்சி புரியும் தலைவர் மக்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி யாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை (அப்த்), தன் உரிமையாளரின் (சய்யித்) செல்வத்திற்குப் பொறுப் பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2555நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடிமைப் பெண் விபசாரம் செய்தால் அவளுக்குச் சாட்டையடி கொடுங்கள். அதன் பிறகும் அவள் விபசாரம் செய்தால் (அப்போதும்) அவளுக்குச் சாட்டையடி(யே) கொடுங்கள். பிறகு மூன்றாவதாகவோ, நான்காவதாகவோ விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக்கற்றைக்கேனும் விற்றுவிடுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் ஸைத் பின் காலித் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2557நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமரச் செய்து உண்ணட்டும். அவ்வாறு) அமரச்செய்யவில்லையென் றாலும், அவருக்கு யிஒரு கவளம் அல்லது இரு கவளங்கள்’ அல்லது யிஒரு வாய் அல்லது இரு வாய்கள்’ (அந்த உணவி லிருந்து) கொடுக்கட்டும். ஏனெனில், அதைத் தயாரிக்கும் சுமையை அந்தப் பணியாள் ஏற்றுள்ளார். அத்தியாயம் :

2558அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே; உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார். தம் பிரஜைகள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளியாவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளி யாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் (அடிமை) தன் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவை பற்றி விசாரிக்கப் படுவான். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘நான் இவற்றையெல்லாம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன். மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘‘மனிதன் (மகன்) தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவனது பொறுப்புக் குட்பட்டவை குறித்து அவன் விசாரிக்கப் படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்’ என்று சொன்ன தாகவும் எண்ணுகிறேன்” என்று கூறி னார்கள். அத்தியாயம் :

2559நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் (யாரையேனும்) தாக்கினால், முகத்(தில் அடிப்ப)தைத் தவிர்க்கட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

ஆதாரம்: Sahih al Bukhari

WEBREATH · 11:11

«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath