ஹதீஸ்
பின்செல்

ஸஹீஹ் அல்-புகாரி 28 · Penalty of Hunting while on Pilgrimage

1821அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஹுதைபியா ஆண்டில் (மக்கா வுக்குப்) புறப்பட்டேன். என் தோழர்கள் இஹ்ராம் கட்டியிருந்தனர்; நான் இஹ்ராம் கட்டவில்லை. எதிரிகள் நபி (ஸல்) அவர்கள்மீது படையெடுத்து வரவிருக்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக் கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (அந்தப் படையை எதிர் கொள்ள முன்னே) புறப்பட்டார்கள். நான் மற்ற நபித்தோழர் களுடன் (சென்றுகொண்டு) இருந்தபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கலாயினர். அப்போது நான் கூர்ந்து கவனித்தேன். ஒரு காட்டுக் கழுதை எனக்குத் தென் பட்டது. அதைத் தாக்கி ஈட்டியால் குத்தி (ஓடி விடாமல்) நிறுத்திவிட்டேன். என் தோழர்களிடம் உதவி வேண்டினேன். (இஹ்ராம் கட்டியிருந்ததால்) அவர்கள் எனக்கு உதவ மறுத்துவிட்டனர். பிறகு அதன் இறைச்சியை நாங்கள் உண்டோம். (எங்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த) நபி (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடுவோமோ என்று நாங்கள் அஞ்சினோம். நபி (ஸல்) அவர்களைத் தேடி என் குதிரையைச் சிறிது நேரம் விரைவாகவும் சிறிது நேரம் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் நான் பனூ கிஃபார் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்து, “நபி (ஸல்) அவர்களை எங்கே விட்டுவந்தீர்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அவர்களை ‘தஅஹன்’ எனும் நீர்நிலை அருகே விட்டுவந்தேன். அவர்கள் ‘சுக்யா’ எனும் சிற்றூரில் ஓய்வெடுக்கச் சென்றுகொண்டிருந்தார்கள்” என்று கூறினார். (நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து), “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தோழர்கள் உங்களுக்கு (முகமன் கூறி) சாந்தியும் இறை வளமும் கிடைத்திட பிரார்த்திக்கிறார்கள். உங்களைப் பிரிந்து விடுவோமோ என்று அவர்கள் அஞ்சு கிறார்கள். எனவே, (அவர்கள் வரும்வரை) அவர்களுக்காக நீங்கள் காத்திருங்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் காட்டுக் கழுதையை வேட்டையாடினேன்: அதில் சிறிதளவு என்னிடம் மீதி உள்ளது!” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் மக்களி டம் “உண்ணுங்கள்” என்றார்கள். (அப் போது) அம்மக்கள் இஹ்ராம் கட்டியிருந் தார்கள். அத்தியாயம் :

1822அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா (ஒப்பந்தம் நடந்த ஹிஜ்ரீ ஆறாவது) ஆண்டில் நபி (ஸல்) அவர் களுடன் நாங்கள் சென்றோம். அவர் களின் தோழர்கள் (உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டியிருந்தனர். ‘ஃகைகா’ எனும் இடத்தில் எதிரிகள் இருப்பதாக எங்களுக் குத் தகவல் கிடைத்தது. நாங்கள் அவர்களை நோக்கிச் சென்றோம். (வழியில்) ஒரு காட்டுக் கழுதையைக் கண்டு என் தோழர்கள் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்கலாயினர். நான் கூர்ந்து நோக்கியதில் அதைப் பார்த்துவிட்டேன். அதன் மீது குதிரையை ஏவி, ஈட்டியால் அதைக் குத்திவிட்டேன். (அதைத் தாக்குவதற்கு) என் தோழர்களிடம் நான் உதவி கோரியபோது, அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்ததால்) எனக்கு உதவ மறுத்துவிட்டார்கள். பிறகு அதை நாங்கள் உண்டோம். பிறகு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போய்ச்சேர்ந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடுவோம் என்று அஞ்சி, என் குதிரையை ஒரு முறை விரைவாகவும் இன்னொரு முறை மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் பனூ கிஃபார் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு மனிதரைச் சந்தித்தேன். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எங்கே விட்டுவந்தீர்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அவர்களை ‘தஅஹன்’ எனும் நீர்நிலை அருகே விட்டுவந்தேன். அப்போது அவர்கள் ‘சுக்யா’ எனும் சிற்றூரில் ஓய்வெடுக்கப் போய்க்கொண்டிருந்தார்கள்” என்று கூறி னார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சென்றடைந்து, “அல்லாஹ் வின் தூதரே! உங்கள் தோழர்கள் உங்க ளுக்கு முகமன் (சலாம்) கூறி அனுப்பி னார்கள்; உங்களிடமிருந்து தங்களை எதிரிகள் பிரித்துவிடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்; எனவே, அவர்களுக்காகக் காத்திருங்கள்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்தார்கள். மேலும், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஒரு காட்டுக் கழுதையை வேட்டையாடினோம்; எங்களிடம் (அதில்) சிறிதளவு எஞ்சியுள்ளது” என்று கூறி னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்த தம் தோழர்களிடம் “உண்ணுங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

1823அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மதீனாவுக்கு மூன்று (கல்) தொலைவிலுள்ள ‘அல்காஹா’ எனும் இடத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களில் இஹ்ராம் கட்டியவர்களும் இருந்தனர்; இஹ்ராம் கட்டாதவர்களும் இருந்தனர். என் தோழர்கள் எதையோ உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். நான் கூர்ந்து பார்த்தபோது ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. (நான் குதிரையில் ஏறியதும்) எனது சாட்டை கீழே விழுந்தது. (அதை எடுத்துத் தருமாறு என் தோழர்களிடம் நான் கேட்டபோது) என் தோழர்கள் “நாங்கள் இஹ்ராம் கட்டியிருப் பதால் இந்த விஷயத்தில் உமக்கு எந்த உதவியும் செய்யமாட்டோம்” என்று .கூறிவிட்டனர். எனவே, நானே (இறங்கி) அதை எடுத்தேன். பின்னர் ஒரு பாறாங் கல்லுக்கு அப்பாலிருந்து (மறைந்து) கழுதையின் அருகே சென்று அதை வெட்டினேன். என் தோழர்களிடம் அதைக் கொண்டுவந்தேன். சிலர் “உண்ணுங்கள்” என்றனர். வேறுசிலர் “உண்ணாதீர்கள்” என்றனர். எங்களுக்கு முன்னே சென்றுகொண்டிருந்த நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதை உண்ணுங்கள். அது அனுமதிக்கப்பட்டதுதான்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இதை நமக்கு அறிவித்த) ஸாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் இங்குதான் (மக்காவுக்கு) வந்துள்ளார்கள். அவரிடம் சென்று இதுபோன்ற விஷயங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள் என அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள். அத்தியாயம் :

1824அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் (மக்களும்) புறப்பட்டனர். அவர்களில் ஒரு சிறு குழுவை, அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் வேறு வழியில் திருப்பிவிட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். “நாம் சந்திக்கும்வரை கடலோரமாக நீங்கள் செல்லுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கடலோரமாகச் சென்று திரும்பிய போது, என்னைத் தவிர அனைவரும் இஹ்ராம் கட்டியிருந்தனர்; நான் மட்டும் இஹ்ராம் கட்டியிருக்கவில்லை. இவ்வாறு நாங்கள் சென்றுகொண்டிருக்கும்போது (என் தோழர்கள்) காட்டுக் கழுதைகளைக் கண்டனர். நான் அக்கழுதைகளைத் தாக்கி, ஒரு பெட்டைக் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னேன். அனைவரும் (ஓரிடத்தில்) இறங்கி அதன் இறைச்சியைச் சாப்பிட்டனர். “நாம் இஹ்ராம் கட்டியிருக் கும் நிலையில் வேட்டையாடப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்ணலாமா?” என்று தோழர்கள் (ஒருவரையொருவர்) கேட்டுக்கொண்டனர். எஞ்சிய இறைச் சியை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். என் தோழர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இஹ்ராம் கட்டியிருந்தோம்: அபூகத்தாதா இஹ்ராம் கட்டவில்லை; அப்போது காட்டுக் கழுதைகளை நாங்கள் கண்டோம்: அபூகத்தாதா அவற்றைத் தாக்கி ஒரு பெட்டைக் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னார். ஓரிடத்தில் இறங்கி, அதன் இறைச்சியை நாங்கள் சாப்பிட்டோம்; ‘நாம் இஹ்ராம் கட்டியிருக்கும்போது வேட்டையாடப்பட்ட பிராணியின் மாமிசத்தை உண்ணலாமா?’ என்று நாங்கள் (எங்களுக்குள்) பேசிக்கொண்டோம்: பிறகு, எஞ்சிய இறைச்சியை எடுத்துவந்திருக் கிறோம்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் எவரேனும் அதைத் தாக்குமாறு அவரைப் பணித்தாரா? அல்லது அதை நோக்கி சைகை செய்தாரா?” என்று கேட்டார்கள். தோழர்கள் “இல்லை” என்றனர். “அப்படி யானால், அதன் எஞ்சிய இறைச்சியை உண்ணுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

1825ஸஅப் பின் ஜஸ்ஸாமா அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா-மதீனா இடையிலுள்ள) ‘அப்வா’ அல்லது ‘வத்தான்’ எனும் இடத்தில் இருந்தபோது, நான் அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினேன்; அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். என் முகத்தில் ஏற்பட்ட (மாற்றத்)தைக் கண்டதும், “நாம் இஹ்ராம் கட்டியிருப்பதால்தான் இதை ஏற்க மறுத்தோம்” என்று கூறினார்கள்.2 அத்தியாயம் :

1826அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (தீங்கிழைக்கும்) ஐந்து உயிரினங்களை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர்மீது குற்றமில்லை. இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

1827இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தீங்கிழைக்கும் ஐந்து உயிரினங்களை) இஹ்ராம் கட்டியவர் கொல்லலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர் (ஹஃப்ஸா) எனக்கு அறிவித்தார். அத்தியாயம் :

1828ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: (தீங்கிழைக்கும்) ஐந்து உயிரினங்கள் உள்ளன. அவற்றைக் கொல்பவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. (நீர்க்)காகம், பருந்து, எலி, தேள், வெறிநாய் ஆகியவை தான் அவை. அத்தியாயம் :

1829அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து உயிரினங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தீங்கிழைப்பவை. அவை புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளேயும் கொல்லப்படும். (நீர்க்)காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியவைதான் அவை இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

1830அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மினாவிலுள்ள ஒரு குகையில் இருந்தோம். அப்போது ‘வல்முர்ஸலாத்’ (ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவைமீது சத்தியமாக!) என்று தொடங்கும் (77ஆவது) அத்தியாயம் அவர்களுக்கு அருளப் பெற்றது. அதை நான் நபி (ஸல்) அவர் களின் வாயிலிருந்து புத்தம் புதிதாக (ஓதக்) கேட்டுக்கொண்டிருந்தேன். அதை ஓதிய தால் அவர்களின் வாய் ஈரமாக இருந்தது. அப்போது ஒரு பாம்பு எங்களை நோக்கிச் சீறியது. உடனே நபி (ஸல்) அவர்கள், “அதைக் கொல்லுங்கள்!” என்றார்கள். நாங்கள் அதைக் கொல்ல விரைந்தபோது அது சென்றுவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அதன் தீங்கிலிருந்து நீங்கள் காப்பாற்றப்பட்டதைப் போன்றே, உங்கள் தீங்கிலிருந்து அதுவும் காப்பாற்றப்பட்டுவிட்டது” என்று கூறினார்கள். அத்தியாயம் :

1831நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பல்லி தீங்கிழைக்கக்கூடியது” என்று சொன்னார்கள். (ஆனால்,) அதைக் கொல்லும்படி அவர்கள் உத்தரவிட்டு நான் செவியுற்றதில்லை.4 அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இதற்கு) முந்தைய ஹதீஸ், ‘மினா’ புனித (ஹரம்) எல்லையில் அடங்கும் என்பதை யும், அங்கு பாம்பைக் கொல்வது குற்றமாகாது என்றே அவர்கள் கருதினர் என்பதையும் காட்டுகிறது என்போம். அத்தியாயம் :

1832சயீத் பின் அபீசயீத் அல்மக்புரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது : (யஸீதின் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அம்ர் பின் சயீத், (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக), மக்காவுக்குப் படைகளை அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: “தலைவரே! மக்கா வெற்றிக்கு மறுநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியை உமக்கு நான் கூறுகிறேன். என் காதுகள் அதைச் செவியுற்றன; என் உள்ளம் அதை நினைவில் வைத்துள்ளது. அவர்கள் அதைக் கூறியபோது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக் கின்றன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்தான் மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கினான். அதற்குப் புனிதம் வழங்கியவர்கள் மனிதர்கள் அல்லர். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகின்ற எவருக்கும் இங்கே (சண்டையிட்டு) இரத்தத்தைச் சிந்து வதற்கோ இங்குள்ள மரத்தை வெட்டு வதற்கோ அனுமதி இல்லை; அல்லாஹ் வின் தூதர் (இங்கு மக்கா வெற்றி நாளில் ஒரு பகல் மட்டும்) போர் செய்ததனால் இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால், “அல்லாஹ், தன் தூதருக்குத் தான் அனுமதி வழங்கினான்; உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை” என்று கூறி விடுங்கள். எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப் பட்டது. இன்று அதன் புனிதத் தன்மை நேற்றைய அதன் புனிதத் தன்மைக்கு மீண்டு வந்துவிட்டது. (இங்கு) வந்திருப்போர் வராதவருக்குச் சொல்லிவிடுங்கள். அப்போது அபூஷுரைஹ் (ரலி) அவர்களிடம், “இதற்கு அம்ர் பின் சயீத் என்ன பதில் கூறினார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அபூஷுரைஹே! உம்மைவிட இதைப் பற்றி நான் நன்கு அறிவேன். குற்றவாளிக்கும், கொலை செய்துவிட்டு ஓடிவந்தவனுக்கும், திருடிவிட்டு ஓடிவந்தவனுக்கும் ‘ஹரம்’ புனித எல்லை நிச்சயம் பாதுகாப்புத் தராது” என்று அம்ர் கூறினார் எனப் பதிலளித்தார்கள். (இங்கு மூலத்தில் ‘திருட்டு’ என்பதைக் குறிக்க ‘குர்பத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.) ‘குர்பத்’ என்பதற்கு பொதுவான குற்றம் என்ற பொருளும் உண்டு. அத்தியாயம் :

1833இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நிச்சயமாக அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான்; எனக்கு முன்னர் எவருக்கும் (அதில் போர் செய்வது) அனுமதிக்கப்படவில்லை; எனக்குப்பின் எவருக்கும் அனுமதிக்கப் படாது; எனக்குக்கூட பகலில் சிறிது நேரமே அனுமதிக்கப்பட்டது. எனவே, இங்குள்ள புற்பூண்டுகளைப் பறிக்கக் கூடாது; இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்(து உரியவரிடம் சேர்ப்)பவர் தவிர மற்றவர்கள் எடுக்கக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது (என் தந்தை) அப்பாஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அடக்கக் குழிகளுக்கும் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகின்ற ‘இத்கிர்’ புல்லைத் தவிரவா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இத்கிர் எனும் புல்லைத் தவிர!” என்று கூறினார்கள். “வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது என்பதன் பொருள் உமக்குத் தெரியுமா? நிழலில் படுத்திருக்கும் பிரா ணியை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தங்குவதுதான்” என்று அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் காலித் பின் மஹ்ரான் (ரஹ்) அவர்களிடம் கூறினார்கள். அத்தியாயம் :

1834இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கண்ட நாளில், “இனி (மக்காவிலிருந்து) புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) என்பது கிடையாது; என்றாலும், அறப்போர் புரிவதும் அதற்காக(வும் மற்ற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும்தான் இருக்கிறது. நீங்கள் போருக்காக அழைக் கப்பட்டால் புறப்படுங்கள். வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ் இந்த ஊரைப் புனிதப்படுத்தி யிருக்கிறான்; அவன் புனிதப்படுத்திய காரணத்தால் மறுமை நாள்வரை இவ்வூர் புனிமானதாகவே இருக்கும். எனக்கு முன்னர் எவருக்கும் இங்கு போர் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை: எனக் குக்கூட பகலில் சிறிது நேரம் (மட்டுமே) அனுமதிக்கப்பட்டது. அல்லாஹ் புனிதப்படுத்தியிருப்பதால், மறுமை நாள்வரை இவ்வூர் புனிதமான தாகவே விளங்கும். இங்குள்ள முட்கள் வெட்டப்படக் கூடாது; வேட்டைப் பிராணி விரட்டப்படக் கூடாது; இங்கே கீழே விழுந்துகிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்(து உரியவரிடம் சேர்ப்)பவர் தவிர மற்றவர் எடுக்கக் கூடாது; இங்குள்ள புற்பூண்டுகள் பறிக்கப்படக் கூடாது!” என்று கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! இத்கிர் எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது வீடுகளுக்கும் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகிறது” என்று (என் தந்தை) அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்க, நபி (ஸல்) அவர்கள், “இத்கிரைத் தவிர” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

1835இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இவ்விரு அறிவிப்புகளுமே அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடமிருந்து வந்தவைதான். அதாஉ (ரஹ்) அவர்களிடமும், தாவூஸ் (ரஹ்) அவர்களிடமும் அவர் இந்த ஹதீஸைக் கேட்டிருக்கலாம் என்று சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார் கள். அதாஉ (ரஹ்) அவர்களிடம் தாம் கேட்ட முதலாவது ஹதீஸ் இதுதான் என்று அம்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :

1836இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்த நிலையில், (மக்கா சாலையில் உள்ள) ‘லஹ்யு ஜமல்’ எனுமிடத்தில் தமது தலையின் நடுப் பகுதியில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். அத்தியாயம் :

1837இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டி யிருக்கும்போது அன்னை மைமூனா (ரலி) அவர்களை மணமுடித்துக்கொண்டார்கள்.6 அத்தியாயம் :

1838இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியிருக்கும்போது எந்த ஆடைகளை நாங்கள் அணிய வேண்டுமென்று நீங்கள் எங்களுக்குக் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (முழு நீளச்) சட்டைகளையும், முழுக்கால் சட்டைகளையும், தலைப்பாகைகளையும், (முக்காடுள்ள) மேலங்கிகளையும் அணியாதீர்கள். ஒருவரிடம் காலணிகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து)கொள்ளட்டும்; குங்குமப்பூச் சாயம், வர்ஸ் எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள். இஹ்ராம் கட்டிய பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது” என்று பதிலளித் தார்கள்.8 இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

1839இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இஹ்ராம் கட்டியிருந்த ஒரு மனிதரை, அவரது ஒட்டகம் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அவரது உடல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, “அவரை நீராட்டிக் ‘கஃபன்’ இடுங்கள்; அவரது தலையை மூடாதீர்கள்; அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். ஏனெனில், அவர் (மறுமையில்), ‘தல்பியா’ கூறியவராக எழுப்பப்படுவார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

1840அப்துல்லாஹ் பின் ஹுனைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘அல்அப்வா’ என்ற இடத்தில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகிய இருவரும் (ஒரு விஷயத்தில்) கருத்து வேறுபாடு கொண்டனர். அதாவது “இஹ்ராம் கட்டியவர் தலையைக் கழுவலாம்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.“இஹ்ராம் கட்டியவர் தலையைக் கழுவக் கூடாது” என்று மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), என்னை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். நான் சென்றபோது, அவர்கள் கிணற்றின்மேல் ஊன்றப்பட்ட இரண்டு மரக்கழிகளுக்கிடையே ஒரு துணியால் திரையிடப்பட்டுக் குளித்துக் கொண்டிருந்தார்கள். “நான் அவர்களுக்கு முகமன் (சலாம்) கூறினேன். “யார் அது?” என்று கேட்டார்கள். “நான்தான் அப்துல்லாஹ் பின் ஹுனைன்! ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருக்கும்போது எவ்வாறு தமது தலையைக் கழுவுவார் கள்?’ என்று உங்களிடம் கேட்பதற்காக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னை அனுப்பினார்கள்” என்று நான் கூறினேன். அபூஅய்யூப் (ரலி) அவர்கள், தமது கையைத் திரையின் மீது வைத்து, அவர்களின் தலை எனக்குத் தெரியுமளவிற்குத் திரையைக் கீழே இறக்கினார்கள். பிறகு, தண்ணீர் ஊற்றுகின்ற மனிதரிடம், “தண்ணீர் ஊற்றுவீராக!” என்றார்கள். அவர் அவர்களின் தலைமீது தண்ணீர் ஊற்றினார். அபூஅய்யூப் (ரலி) அவர்கள், தமது தலையை இரு கைகளாலும் தேய்த்துவிட்டு, முன்னும் பின்னுமாகக் கைகளைக் கொண்டுசென்றார்கள்; “இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கிறேன்” என்றும் கூறினார்கள். அத்தியாயம் :

1841இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்தியபோது, “யாருக்குக் காலணிகள் கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும்; யாருக்குக் கீழங்கி கிடைக்கவில்லையோ அவர் முழுக்கால் சட்டைகளை அணியட்டும்!” என்று இஹ்ராம் கட்டியவர்களுக்குக் கூறியதை நான் செவியுற்றேன். அத்தியாயம் :

1842அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இஹ்ராம் கட்டியவர் எத்தகைய ஆடைகளை அணியலாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(முழு நீளச்) சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை கள், (முக்காடுள்ள) மேலங்கிகள், குங்குமச் சாயம் தோய்ந்த ஆடை, வர்ஸ் எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்ந்த ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது. காலணிகள் கிடைக்காதவர் காலுறைகளை அணிந்துகொள்ளட்டும்! ஆயினும், கணுக் காலுக்குக் கீழே இருக்கும்படி அவற்றைக் கத்தரித்துக்கொள்ளட்டும்!” என்று விடையளித்தார்கள். அத்தியாயம் :

1843இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது அவர்கள், “யாருக்குக் கீழங்கி கிடைக்க வில்லையோ அவர் முழுக்கால் சட்டை களை அணியட்டும்! யாருக்குக் காலணி கள் கிடைக்கவில்லையோ அவர் காலுறை களை அணியட்டும்!” என்றார்கள். அத்தியாயம் :

1844பராஉ (ரலி) அவர்கள் கூறிதாவது: நபி (ஸல்) அவர்கள் துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்யப் புறப்பட்டார்கள். ஆனால், அவர்களை மக்காவிற்குள் நுழையவிட மக்காவாசிகள் மறுத்தார்கள். (அடுத்த ஆண்டில்) ஆயுதங்களை உறையில் போட்டுக்கொண்டு மக்காவினுள் நுழைவதாக அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் உடன்படிக்கை செய்தார்கள். அத்தியாயம் :

1845இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவாசி களுக்கு ‘துல்ஹுலைஃபா’ எனும் இடத்தை யும் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்னுல் மனாஸில்’ எனும் இடத்தையும் யமன்வாசிகளுக்கு ‘யலம்லம்’ எனும் இடத்தையும் இஹ்ராம் கட்டுவதற்குரிய எல்லைகளாக நிர்ணயித் தார்கள்; இந்த எல்லைகள் அந்தப் பகுதி யினருக்கும் அதன் வழியாக வேறு பகுதியிலிருந்து ஹஜ், உம்ராவை நாடி வருபவருக்கும் உரியவையாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் எந்த இடத்தி லிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்தே இஹ்ராம் கட்ட வேண்டும்; மக்காவாசிகள் மக்காவிலிருந்தே இஹ்ராம் கட்ட வேண்டும்.9 அத்தியாயம் :

1846அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் தலையில் இரும்புத் தொப்பியுடன் (இஹ்ராம் கட்டாத நிலையில் மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒரு மனிதர் வந்து, “இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துக்கொண்டிருக்கிறான்” எனக் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “அவனைக் கொன்றுவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.10 அத்தியாயம் :

1847யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்தார். மஞ்சள் அல்லது அதைப் போன்ற அடையாளம் உள்ள மேலங்கியை அவர் அணிந்திருந்தார். “நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது அவர்களைப் பார்க்க விரும்புகிறாயா?” என்று உமர் (ரலி) அவர்கள் என்னிடம் வினவினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு அருளப்பெற்று பின்னர் அது அவர்களைவிட்டு விலகியது; (அதை நான் பார்த்தேன்). அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “உமது ஹஜ்ஜில் செய்யக்கூடியதையே உம்ராவிலும் செய்வீராக!” என்று கூறினார்கள். ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்துவிட்டார். உடனே கடிபட்டவர் (கையை இழுத்தபோது) கடித்தவரது முன்பற்களை உடைத்துவிட்டார். பல்லுடைக்கப்பட்டதற்கு எந்த நஷ்ட ஈடும் தரவேண்டியதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். அத்தியாயம் :

1849இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் அரஃபா பெருவெளியில் தங்கியிருந்தார். அப்போது அவர் தமது ஊர்தி ஒட்டகத் திலிருந்து கீழே விழுந்துவிட்டார். ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரை நீராட்டுங்கள்; இரு ஆடைகளில் இவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். இவருக்கு வாசனைத் தூள் போடாதீர்கள்; இவரது தலையை மூடாதீர்கள்! ஏனெனில், இவர் ‘தல்பியா’ சொல்லும் நிலையில் மறுமை நாளில் இவரை அல்லாஹ் எழுப்புவான்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

1850இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் அரஃபா பெருவெளியில் தங்கியிருந்தார். அப்போது அவர் தமது ஊர்தி ஒட்டகத்தி லிருந்து கீழே விழுந்துவிட்டார். ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள், “இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரை நீராட்டுங்கள்; இரு ஆடைகளில் இவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். இவருக்கு நறுமணம் பூசாதீர்கள். இவரது தலையை மூடாதீர்கள். இவருக்கு வாசனைத் தூள் போடாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் அல்லாஹ், இவரை ‘தல்பியா’ கூறிக்கொண்டிருப்பவராக எழுப்புவான்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

1851இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் இஹ்ராம் கட்டிய நிலையில் தங்கியிருந்த போது, அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட, அவர் இறந்து விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரை நீராட்டுங்கள்; இரு ஆடைகளில் இவருக்கு ‘கஃபன் இடுங்கள்; இவருக்கு நறுமணம் பூசாதீர்கள்; இவரது தலையை மூடாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் இவர் ‘தல்பியா’ கூறிக்கொண்டி ருக்கும் நிலையில் எழுப்பப்படுவார்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :

1852இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘ஜுஹைனா’ எனும் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். ஆனால், அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே, அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிக உரிமை படைத்தவன்” என்றார்கள். அத்தியாயம் :

1853இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘கஸ்அம்’ எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி (நபி (ஸல்) அவர்களிடம்) விடைபெறும் ஹஜ்ஜின்போது வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்கள்மீது விதியாக்கியுள்ள ஹஜ் கடமை முதியவரான என் தந்தைக்கு ஏற்பட்டுள்ளது. அவர் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறை வேறுமா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஆம்” என்றார்கள். அத்தியாயம் :

1855இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்திற்குப் பின்னால் ஃபள்ல் (ரலி) அவர்கள் அமர்ந்திருத்தார்கள். அப்போது ‘கஸ்அம்’ எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வந்தார். ஃபள்ல் (ரலி) அவர்கள் அப்பெண்ணைப் பார்க்கலானார்கள். அப்பெண்ணும் அவர்களைப் பார்த்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் ஃபள்ல் (ரலி) அவர்களின் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பினார்கள். அப்போது அப்பெண்மணி, “அல்லாஹ் விதித்த (ஹஜ்) கடமை என் தந்தைக்கு ஏற்பட்டுவிட்டது; அவர் வாகனத்தில் அமர முடியாத முதியவராக இருக்கிறார்; அவருக்காக நான் ஹஜ் செய்யலாமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஆம்” என்றார் கள். இது விடைபெறும் ஹஜ்ஜின்போது நடந்ததாகும்.11 அத்தியாயம் :

1856இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘ஜம்உ’ (முஸ்தலிஃபா)விலிருந்து (மினாவுக்கு) பயணச் சுமைகளுடன் என்னை இரவி லேயே அனுப்பிவைத்தார்கள். அத்தியாயம் :

1857அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பெட்டைக் கழுதையின் மேல் ஏறி (ஹஜ்ஜுக்குப்) புறப்பட்டேன். -அப்போது நான் பருவ வயதை நெருங் கிக்கொண்டிருந்தேன்.- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். முதல் வரிசைக்கு முன்னால் வாகனத்தை ஓட்டிச் சென்று இறங்கினேன். அது மேயத் துவங்கியது. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் மக்களுடன் வரிசையில் சேர்ந்துகொண்டேன். இது விடைபெறும் ஹஜ்ஜின்போது மினாவில் நடந்ததாகும் என மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது. அத்தியாயம் :

1858சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஏழுவயதுச் சிறுவனாக இருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அத்தியாயம் :

1859ஜுஅய்த் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் குறித்து, அன்னார் நபி (ஸல்) அவர் களுடைய (ஹஜ்ஜின்போது, அவர்களின்) பயணச் சுமைகளுடன் ஹஜ்ஜுக்காக அழைத்துச் செல்லப்பட்டார்கள்” என்று உமர் பின் அப்தில் அஸீல் (ரஹ்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். அத்தியாயம் :

1860இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள், தாம் செய்த இறுதி ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களின் துணைவியருக்கு (ஹஜ் செய்ய) அனுமதி வழங்கினார்கள். அவர்களுடன் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களையும் (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களையும் அனுப்பிவைத்தார்கள். அத்தியாயம் :

1861இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், “அல்லாஹ்வின் தூதரே! (பெண் களாகிய) நாங்கள் யுத்தத்திலும் அறப் போரிலும் உங்களுடன் சேர்ந்துகொள்ளக் கூடாதா?” என்று கேட்டேன்; அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பெண்களுக்கு) சிறந்த, அழகிய அறப் போர் (ஜிஹாத்), (பாவச்செயல் எதுவும் கலவாத) ஏற்றுக்கொள்ளப்படும் ஹஜ் ஆகும்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடமிருந்து இதை நான் செவியுற்ற பிறகு ஹஜ் செய்வதை நான் விட்டதில்லை. அத்தியாயம் :

1862இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “மணமுடிக்கத் தகாத ஆண் (மஹ்ரம்) துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மணமுடிக்கத் தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும் போதுதான் (மற்ற) ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ் வின் தூதரே! நான் இன்னின்ன இராணுவப் பிரிவுடன் புறப்பட எண்ணி யிருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக!” என்றார்கள். அத்தியாயம் :

1863இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் ஹஜ்ஜை முடித்துத் திரும்பியபோது உம்மு சினான் அல்அன்சாரியா என்ற பெண்மணியிடம், “நீ ஹஜ்ஜுக்கு வர என்ன தடை?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, “என் கணவரே காரணம்; அவருக்குத் தண்ணீர் இறைக்கும் இரண்டு ஒட்டகங்கள் உள்ளன. ஒன்றில் ஏறி அவர் ஹஜ்ஜுக் குச் சென்றுவிட்டார்; மற்றொன்று எங்களுக்குரிய நிலத்திற்குத் தண்ணீர் இறைத்துக்கொண்டிருக்கிறது; (இதுவே காரணம்)’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “ரமளானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னுடன் ஹஜ்ஜுச் செய்வதற்கு நிகராகும்” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. ஜாபிர் (ரலி) அவர்களும் இவ்வாறே அறிவித்துள் ளார்கள். அத்தியாயம் :

1864அபூசயீத் அல்குத்ரீ (ரலி) கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான்கு விஷயங்களைச் செவியுற்றேன். அவை எனக்கு மிகவும் பிடித்தவை; விருப்பமானவை. (அவை:) “கணவனோ மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினரோ (மஹ்ரம்) இல்லாமல் இரண்டு நாட்கள் தொலைவுக்கு ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது. அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும்வரை, சுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும்வரை எந்தத் தொழுகையும் தொழக் கூடாது. மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா), எனது பள்ளிவாசல் (மஸ்ஜிதந் நபவீ), (ஜெருசலத்தில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு பள்ளிவாசல்களுக்கு (அதிக நன்மையை நாடி) (புனித)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது!” அபூசயீத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் பங்கெடுத்திருக்கிறார்கள் என்று (அறிவிப் பாளர்களில் ஒருவரான) கஸஆ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :

1865அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு முதியவர் தம் இரு புதல்வர்களுக் கிடையே தொங்கியபடி (கால்கள் பூமியில் இழுபட) நடந்துவந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “(கஅபா வரை) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்” என்று மக்கள் கூறி னார்கள். நபி (ஸல்) அவர்கள், “இவர் தம்மை இவ்விதம் வேதனைப்படுத்திக்கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது” என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். அத்தியாயம் :

1866உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் சகோதரி கஅபாவரை (காலணி அணியாமல்) நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அவர், இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்குமாறு எனக்கு உத்தரவிட்டார். நான் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவர் (சிறிது தூரம்) நடந்துவிட்டு வாகனத்தில் ஏறிக்கொள்ளட்டும்” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கும் அபுல்கைர் (ரஹ்) அவர்கள், அன்னாரைவிட்டு இணைபிரியாதவராக (நேரடியாக நபிமொழிகளைக் கேட்பவராக) இருந்தார். அத்தியாயம் :

ஆதாரம்: Sahih al Bukhari

WEBREATH · 11:11

«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari

Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.

WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath