ஸஹீஹ் அல்-புகாரி 18 · Shortening the Prayers (At-Taqseer)
1080இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி ஆண்டில் மக்காவில்) தங்கியிருந்தபோது, பத்தொன்பது நாட்கள் சுருக்கித் தொழு தார்கள். ஆகவே, நாங்களும் பத்தொன்பது நாட்களுக்குப் பயணம் மேற்கொண்டால், சுருக்கி (கஸ்ர் செய்து) தொழுவோம். (அதைவிட) அதிகமாகத் தங்கினால், (சுருக்காமல் வழக்கப்படி) முழுமையாகத் தொழுவோம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
1081யஹ்யா பின் அபீஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்கள், “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து (ஹஜ்ஜுக்காக) மக்காவை நோக்கிச் சென்றோம். நாங்கள் மதீனா திரும்பும்வரை நபி (ஸல்) அவர்கள் (கடமையான நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டிரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்” என்று கூறினார்கள். உடனே நான், “நீங்கள் மக்காவில் எத்தனை நாட்கள் தங்கினீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “பத்து நாட்கள் தங்கியிருந்தோம்” என்று பதிலளித்தார்கள்.3 அத்தியாயம் :
1082அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோருட னும் உஸ்மான் (ரலி) அவர்களது ஆட்சி யின் ஆரம்பக் கட்டத்தில் உஸ்மான் (ரலி) அவர்களுடனும் ‘மினா’வில் (கடமையான நான்கு ரக்அத்களைச் சுருக்கி) இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். உஸ்மான் (ரலி) அவர்கள் பின்னர் (சுருக்கித் தொழா மல்) முழுமையாகவே தொழுதார்கள். அத்தியாயம் :
1083ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மினாவில் எங்களுக்கு (கடமையான நான்கு ரக்அத் களைச் சுருக்கி) இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். அந்நாளில் அவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அச்சமின்றி பாதுகாப்போடுதான் இருந்தார்கள். அத்தியாயம் :
1084அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் மினாவில் எங்களுக்கு (இரண்டாகச் சுருக்காமல்) நான்கு ரக்அத்களாகவே தொழுவித்தார்கள். இதுபற்றி (அத்தொழுகையில் கலந்தகொண்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வினப்பட்ட போது, ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’ என்று கூறினார்கள். பின்னர் “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். அபூபக்ர் (ரலி) அவர்களுடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். மினாவில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுட னும் இரண்டு ரக்அத்களாகவே தொழு தேன். (இப்போது நான் தொழுத) நான்கு ரக்அத்களிலிருந்து ஒப்புக்கொள்ளப்பட்ட இரண்டு ரக்அத்கள் என் பங்காகக் கிடைத் தால் போதுமே!” என்று கூறினார்கள். அத்தியாயம் :
1085இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலையில் ஹஜ்ஜுக்கு ‘இஹ்ராம்’ கட்டியவர்களாக (மக்காவுக்கு) வந்து சேர்ந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “தம்முடன் குர்பானி பிராணியைக் கொண்டுவந்திருப்பவர்களைத் தவிர மற்றவர்கள் தமது இஹ்ராமை ‘உம்ரா’விற் குரியதாக மாற்றிக்கொள்ள வேண்டும்” எனக் கட்டளையிட்டார்கள்.5 இந்த ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
1086நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
1087நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மூன்று நாட்களுக் கான பயணம் மேற்கொள்ள வேண்டாம். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
1088அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மேற்கொள்ள வேண்டாம்.7 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
1089அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் (மக்கா நோக்கிப் புறப்பட்டபோது) லுஹ்ர் தொழுகையை மதீனாவில் நான்கு ரக்அத் களாகத் தொழுதேன். (மதீனாவுக்கு அருகிலுள்ள) ‘துல்ஹுலைஃபா’வில் (அஸ்ர் தொழுகையை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கி)த் தொழுதேன்.9 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
1090ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆரம்பத்தில் தொழுகை இரண்டு ரக்அத்களாகத்தான் கடமையாக்கப்பட்டது. பயணத் தொழுகை அவ்வாறே (இரண்டிரண்டு ரக்அத்களாகவே) நீடித்தது; சொந்த ஊரில் (தொழும் லுஹ்ர், அஸ்ர், இஷா ஆகிய தொழுகைகள் நான்கு ரக்அத்களாக) முழுமைப்படுத்தப்பட்டன. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) உர்வா (ரஹ்) அவர்களிடம் ஆயிஷா (ரலி) அவர்களின் நிலைப்பாடு என்ன (அவர்கள் ஏன் பயணத்தில் சுருக் கித் தொழாமல்) முழுமையாகத் தொழுதார் கள்?” என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், “உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கம் கூறியதைப் போன்று ஆயிஷா (ரலி) அவர்களும் விளக்கம் கூறிவந்தார் கள் என்று பதிலளித்தார்கள்.10 அத்தியாயம் :
1092அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் புறப்படுவதாக இருந்தால், மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து (மஃக்ரிபின் கடைசி நேரத்தில்) தொழுவார்கள். சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் அவசரமாகப் பயணம் புறப்படுவதாக இருந்தால் இவ்வாறே செய்வார்கள். அத்தியாயம் :
1093ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டக ஊர்தியில் அமர்ந்து, அது செல்லும் திசை நோக்கி (கூடுதலான தொழுகைகளை) தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். அத்தியாயம் :
1094ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வாகனத்தில் செல்லும்போது, ‘கிப்லா’ அல்லாத திசை நோக்கி கூடுதலான தொழுகைகளைத் தொழுதிருக்கிறார்கள். அத்தியாயம் :
1095நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது ஊர்தி ஒட்டகத்தில் அமர்ந்து கூடுதலான தொழுகைகளையும் ‘வித்ர்’ தொழுகையையும் தொழுவார்கள். “நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்வார்கள்” என்றும் குறிப்பிடுவார்கள். அத்தியாயம் :
1096அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பயணத்தின்போது ஊர்தி ஒட்டகத்தில் அமர்ந்து, அது செல்லும் திசை நோக்கி (கூடுதலான தொழுகை களை) சைகை செய்து தொழுவார்கள். மேலும், “நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்வார்கள்” என்றும் குறிப்பிடுவார்கள். அத்தியாயம் :
1097ஆமிர் பின் ரபிஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஊர்தி ஒட்டகத்தில் அமர்ந்து, தாம் செல்ல வேண்டிய திசை நோக்கித் தமது தலையால் சைகை செய்து தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். கடமையான (ஃபர்ள்) தொழுகையில் இவ்வாறு செய்ய மாட்டார்கள். அத்தியாயம் :
1098சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவில் பயணம் செய்யும் போது தமது ஊர்தி ஒட்டகத்தின் மீதமர்ந்து தொழுவார்கள். தமது முகம் எத்திசையில் இருக்கிறதென்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்திசை நோக்கிச் சென்றாலும் ஊர்தி ஒட்டகத்தின்மீது அமர்ந்து கூடுதலான தொழுகைகளையும் ‘வித்ர்’ தொழுகையையும் தொழுவார்கள். எனினும், கடமையான தொழுகைகளை வாகனத்தின் மீதமர்ந்து தொழமாட்டார்கள் (வாகனத்திலிருந்து இறங்கித்தான் தொழு வார்கள்)” என்றும் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
1099ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவாகள் தமது ஊர்தி ஒட்டகத்தில் அமர்ந்து கிழக்கு நோக்கித் தொழுவார்கள். கடமையான தொழுகை யைத் தொழ விரும்பும்போது (ஊர்தி யிலிருந்து) இறங்கி ‘கிப்லா’வை முன் னோக்குவார்கள். அத்தியாயம் :
1100அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (அப்துல் மலிக் பின் மர்வானைச் சந்தித்து பஸ்ராவின் ஆளுநர் ஹஜ்ஜாஜ் பற்றி முறையிட்டுவிட்டு) ஷாம் (சிரியா) நாட்டி லிருந்து திரும்பி வந்தபோது, அவர்களை நாங்கள் எதிர்கொண்டோம். அப்போது அவர்களை நாங்கள் ‘அய்னுத் தம்ர்’ எனும் இடத்தில் சந்தித்தோம். அப்போது அவர்கள் கழுதையின் மீது அமர்ந்து (கூடுதலான தொழுகை) தொழுவதை நான் பார்த்தேன். அவர்களின் முகம் கிப்லாவுக்கு அந்தப் பக்கம் -அதாவது இடப்புறம்- நோக்கி அமைந்திருந்தது. “கிப்லா அல்லாத வேறு திசையில் நீங்கள் தொழுவதை நான் கண்டேனே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தில்) இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்காவிட்டால் நானும் இவ்வாறு செய்திருக்கமாட்டேன்” என்று விடையளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
1101ஹஃப்ஸ் பின் ஆஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு பயணத்தின்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான் (பயணத்தில்) நபி (ஸல்) அவர்களுடன் இருந்திருக்கிறேன். அவர்கள் பயணத்தில் கூடுதலான தொழு கைகளைத் தொழுவதை நான் பார்த்ததே யில்லை. ‘அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி இருக்கிறது’ (33:21) என்று புகழுக்குரிய அல்லாஹ்வே கூறுகின்றான்” என்றார்கள். அத்தியாயம் :
1102இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணத்தில்) இருந்திருக்கி றேன். அவர்கள் பயணத்தின்போது (கடமையான) இரண்டு ரக்அத்களைவிட (கூடுதலாக) வேறெந்தத் தொழுகையையும் தொழமாட்டார்கள். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் இவ்வாறே நான் (பயணத்தில்) இருந்திருக்கிறேன் (அவர்கள் அனைவரும் இவ்வாறே செய்தனர்).12 அத்தியாயம் :
1103அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘ளுஹா’ தொழுகை தொழுவதைக் கண்டதாக உம்மு ஹானீ (ரலி) அவர்களைத் தவிர வேறு யாரும் நமக்கு அறிவிக்கவில்லை. “நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரம் வெற்றி கொள்ளப்பட்ட நாளில் எனது இல்லத்தில் குளித்துவிட்டு, எட்டு ரக்அத் கள் தொழுதார்கள். அதைவிடச் சுருக்க மாக வேறு எந்தத் தொழுகையையும் அவர்கள் தொழுததை நான் பார்த்ததில்லை. ஆயினும், ருகூஉவையும் சஜ்தாவையும் நிறைவாகச் செய்தார்கள்’ என்று உம்மு ஹானீ (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
1104ஆமிர் பின் ரபிஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இரவில் பயணம் செய்தபோது, தமது ஊர்தி ஒட்டகத்தில் அமர்ந்து அது சென்ற திசை நோக்கிக் கூடுதல் தொழுகைகளைத் தொழுததை நான் பார்த்திருக்கிறேன். அத்தியாயம் :
1105அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஊர்தி ஒட்டகத்தில் அமர்ந்து, தாம் செல்ல வேண்டிய திசையில் தலையால் சைகை செய்து கூடுதல் தொழுகைகளைத் தொழுவார்கள். இதன் அறிவிப்பாளரான சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் இவ்வாறே செய்வார்கள். அத்தியாயம் :
1106அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுவார்கள். அத்தியாயம் :
1107இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொடர்) பயணத்தில் இருக்கும்போது லுஹ்ர் தொழுகையையும் அஸ்ர் தொழு கையையும் சேர்த்துத் தொழுவார்கள். மஃக்ரிப் தொழுகையையும் இஷா தொழுகையையும் சேர்த்துத் தொழு வார்கள். அத்தியாயம் :
1108அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் மஃக்ரிப் தொழுகையையும் இஷா தொழு கையையும் சேர்த்துத் தொழுவார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
1109சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் மேற்கொள்ள நேரிட்டால் மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி மஃக்ரிபை யும் இஷாவையும் சேர்த்து (இஷா நேரத்தில்) தொழுவதை நான் பார்த்திருக்கி றேன்” என்று கூறினார்கள். அவசரமாகப் பயணம் செல்ல நேரிட்டால் (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் இவ்வாறே செய்வார்கள். மஃக்ரிப் தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லி மூன்று ரக்அத்கள் தொழுது சலாம் கொடுப்பார்கள். பிறகு சிறிய இடைவெளி விட்டு இஷா தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லி இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ‘சலாம்’ கொடுப்பார்கள். அவ்விரு தொழுகை களுக்கும் இடையே கூடுதலான தொழுகை எதையும் தொழமாட்டார்கள். இஷா தொழுகைக்குப் பிறகிலிருந்து இரவுத் தொழுகைக்காக எழும் நேரம் (நடுநிசி)வரை வேறெதையும் தொழ மாட்டார்கள். அத்தியாயம் :
1110அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் -மஃக்ரிப், இஷா ஆகிய- இவ்விரு தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். அத்தியாயம் :
1111அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரியன் உச்சி யிலிருந்து சாய்வதற்குமுன் பயணம் மேற்கொண்டால். லுஹ்ர் தொழுகையை அஸ்ர் நேரம்வரை தாமதப்படுத்தி, லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து (அஸ்ர் நேரத்தில்) தொழுவார்கள். (பயணம் புறப்படுவதற்குமுன்) சூரியன் உச்சியிலி ருந்து சாய்ந்துவிட்டால், லுஹ்ர் தொழுகை யைத் தொழுதுவிட்டே பயணம் மேற் கொள்வார்கள். அத்தியாயம் :
1112அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்குமுன் பயணம் புறப்பட்டுவிட்டால், லுஹ்ர் தொழுகையை அஸ்ர் நேரம்வரை தாமதப்படுத்துவார்கள். பிறகு (வாகனத்திலிருந்து) இறங்கி, லுஹ்ர் தொழுகையையும் அஸ்ர் தொழுகையையும் சேர்த்துத் தொழுவார்கள். (பயணம் புறப்படுவதற்குமுன்) சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்துவிட்டால் லுஹ்ர் தொழுதுவிட்டே பயணம் மேற்கொள்வார்கள்.16 அத்தியாயம் :
1113ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது, தமது இல்லத்தில் (மாடியறையில்) உட்கார்ந்தபடியே தொழு தார்கள். (அவர்களை உடல்நலம் விசாரிக்க வந்திருந்த) மக்களில் சிலர் அவர்களுக்குப் பின்னால் நின்றபடி தொழுதனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘உட்காருங்கள்’ என்று மக்களுக் குச் சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும், “இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்படுகிறார். எனவே, அவர் ருகூஉ செய்யும்போது நீங்களும் ருகூஉ செய்யுங்கள் அவர் நிமிரும்போது நீங்களும் நிமிருங்கள்” என்று கூறினார்கள்.18 அத்தியாயம் :
1114அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து கீழே விழுந்ததால் அவர்களுக்கு வலப்புற விலாப் பகுதியில் சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது. அப்போது அவர்களை உடல் நலம் விசாரிக்க நாங்கள் சென்றோம். அப்போது ஒரு தொழுகை(யின் நேரம்) வந்துவிடவே, அவர்கள் உட்கார்ந்தபடியே தொழு(வித்)தார்கள். அப்போது நாங்களும் (அவர்களுக்குப் பின்னால்) உட்கார்ந்த படியே தொழுதோம். (தொழுது முடித்ததும்) “இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட் டுள்ளார். அவர் ‘தக்பீர்’ சொன்னால் நீங்களும் ‘தக்பீர்’ சொல்லுங்கள். அவர் ருகூஉ செய்யும்போது நீங்களும் ருகூஉ செய்யுங்கள். (ருகூஉவிலிருந்து) அவர் நிமிர்ந்தால் நீங்களும் நிமிருங்கள். அவர் ‘சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ் வோரின் புகழுரையை ஏற்கிறான்)’ என்று கூறும் போது நீங்கள் ‘ரப்பனா வ ல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்லுங்கள்” என்று நபியவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
1115இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மூலவியாதி உடையவனாக இருந்ததால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒருவர் நின்று தொழுவதே சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுபவருக்கு, நின்று தொழுபவரின் நன்மையில் பாதியே உண்டு. படுத்துத் தொழுபவருக்கு உட்கார்ந்து தொழுபவரின் நன்மையில் பாதியே உண்டு” என்று விடையளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
1116இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மூலவியாதி உடையவனாக இருந்தால் நபி (ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் “நின்று தொழுவதே சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுபவருக்கு நின்று தொழுபவரின் நன்மையில் பாதியே உண்டு. படுத்துத் தொழுபவருக்கு, உட்கார்ந்து தொழுபவரின் நன்மையில் பாதியே உண்டு” என்று விடையளித் தார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள ‘நாயிம்’ (தூங்குபவர்) எனும் சொல்லுக்கு ‘படுத்துத் தொழுபவர்’ என்பதே என்னைப் பொறுத்த வரை பொருளாகும்.19 அத்தியாயம் :
1117இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மூலவியாதி இருந்தது. ஆகவே, நான் தொழுவது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நின்று தொழுவீராக! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழுவீராக! அதற்கும் இயலாவிட்டால் படுத்துக் கொண்டு தொழுவீராக!” என்று சொன் னார்கள்.20 அத்தியாயம் :
1118இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதுமை அடையும்வரை ஒருபோதும் இரவுத் தொழுகையை உட்கார்ந்து தொழ நான் பார்த்ததில்லை. (முதுமையடைந்த பின்னர்) உட்கார்ந்தவாறே (குர்ஆன் வசனங்களை) ஓதுவார்கள். ருகூஉ செய்ய எண்ணும்போது எழுந்து, முப்பது அல்லது நாற்பது வாசனங்கள் அளவுக்கு ஓதி விட்டுப் பிறகு ருகூஉ செய்வார்கள். அத்தியாயம் :
1119இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமையடைந்தபின்) உட்கார்ந்து (இரவுத் தொழுகை) தொழுதிருக்கிறார்கள். அப்போது உட்கார்ந்தபடியே (இறை வசனங்களை) ஓதுவார்கள். ஓத வேண்டிய தில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அந்த நிலையிலேயே ஓதிவிட்டு ருகூஉ செய்வார்கள். பின்னர் சஜ்தா செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இதைப் போன்றே செய்வார்கள். தொழுது முடித்ததும் பார்ப்பார்கள். அப்போது நான் விழித்துக்கொண்டிருந்தால் என்னுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். நான் உறங்கிக் கொண்டிருந்தால் அவர்களும் படுத்துக்கொள்வார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆதாரம்: Sahih al Bukhari
WEBREATH · 11:11
«Should I not be a thankful servant?» — Sahih al-Bukhari
Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.
WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath