யோபு 15
1அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக:
2ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி,
3பயனில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கம் செய்யலாமோ?
4நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறைத்துக்கொண்டீர்.
5உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது; நீர் தந்திரமுள்ளவர்களின் சொல்லைத் தெரிந்துகொண்டீர்.
6நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று முடிவு செய்கிறது; உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது.
7மனிதரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ? மலைகளுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ?
8நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாகச் சேர்த்துக்கொண்டீரோ?
9நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ?
10உம்முடைய தகப்பனைவிட அதிக வயதுள்ள நரைத்தோரும் மிகுந்த வயதானோரும் எங்களுக்குள் இருக்கிறார்களே.
11தேவன் அருளிய ஆறுதல்களும், உம்முடன் சொல்லப்படுகிற மென்மையான பேச்சும் உமக்கு இழிவான காரியமாயிருக்கிறதோ?
12உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? உம்முடைய கண்கள் கோபத்துடன் பார்க்கிறது என்ன?
13தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படச்செய்கிறீர்.
14மனிதனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், பெண்ணிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
15இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
16அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனிதன் எத்தனை அதிகமாக அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
17உமக்குக் காரியத்தைத் தெரியவைப்பேன் என்னைக் கேளும்; நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன்.
18ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன்.
19அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை.
20துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறான்; பலவந்தம் செய்கிறவனுக்கு அவனுடைய வருடங்களின் எண்ணிக்கை மறைக்கப்பட்டிருக்கிறது.
21பயங்கரமான சத்தம் அவனுடைய காதுகளில் தொனிக்கிறது; அவன் சமாதானமாயிருக்கும்போது பாழாக்குகிறவன் அவன்மேல் வருவான்.
22இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், ஒளிந்திருக்கிறவர்களின் பட்டயத்திற்கு அவன் பயப்படுகிறான்.
23அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்; இருளானநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.
24இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கச்செய்து, போர்வீரனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும்.
25அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான்.
26கடினக்கழுத்துடனும், பருத்த குமிழுள்ள தன் கேடயங்களுடனும் அவருக்கு எதிராக ஓடுகிறான்.
27அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.
28ஆனாலும் பாழான பட்டணங்களிலும், குடிபோன கற்குவியலான வீடுகளிலும் குடியிருப்பான்.
29அவன் செல்வந்தனாவதுமில்லை, அவனுடைய செல்வம் நிலைப்பதுமில்லை; அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை.
30இருளுக்கு அவன் தப்புவதில்லை; நெருப்புத்தணல் அவனுடைய கிளையைக் காய்ந்துபோகச் செய்யும்; அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான்;
31வழிதப்பினவன் மாயையை நம்பக்கூடாது; நம்பினால் மாயையே அவனுடைய பலனாயிருக்கும்.
32அது அவனுடைய நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாகப் பலிக்கும்; அவனுடைய செடிகள் பச்சையாக இருப்பதில்லை.
33பிஞ்சுகள் உதிர்ந்துபோகிற திராட்சைச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்து போகிற ஒலிவமரத்தைப் போலவும் அவன் இருப்பான்.
34மாயக்காரரின் கூட்டம் வெறுமையாகப்போகும்; லஞ்சம் வாங்கினவர்களின் கூடாரங்களை நெருப்பு எரிக்கும்.
35அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறான்; அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும்” என்றான்.
WEBREATH · 11:11
«He himself gives everyone life and breath and everything else» — Acts 17:25
Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.
WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath